Header Ads



அம்பாறை மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் (படங்கள் இணைப்பு)

-பி. முஹாஜிரீன்-

அம்பாறை மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம். தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பல்லாயிரக் கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்கையும் முற்றாக ஸ்தம்பிதம்.

அம்பாறை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதோடு, பலர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், தொடர்ந்தும் சில இடங்களில் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காண்கின்ற இடமெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான வீதிகள் நீர் வடிந்தோடுவதற்காக வெட்டப்பட்டுள்ளதால் உள்ளுர் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்போதிகளிலும் வாய்க்கல்களிலும் நீர் பெருக்கெடுத்து வெள்ள நீர் வீதிகளில் பரவுகின்றன. தொடர்ச்சியான மழை பெய்து வருவதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.


மேலும், கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. இதனால் கடற்றொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான நெல்வயல்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. விவசாயிகளின் வேளாண்மை பராமரிப்பு நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.

அநேகமான பகுதிகளில் மலசல குழிகளிலிருந்து கழிவுகள் வெளியாகி வெள்ள நீரில் கலந்துள்ளதால் சுற்றாடல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்தோடு துர்நாற்றம் வீசுவதாகவும் சுத்தமான குடிநீரைப் பெறுவதில் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதிகமான ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மற்றும் கோழிகள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  
பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் மக்களின் ஆயிரக்கணக்கான குடியிருப்பு வீடுகள்  நீரில் மூழ்கியுள்ளன. மேலும் மழை தொடருமாயின் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதோடு பொதுமக்கள் இடம்பெயரும் நிலை அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.



No comments

Powered by Blogger.