சவூதி அரேபியாவில் 3 பேர் மரண தண்டனையிலிருந்து விடுவிப்பு
சவுதியில் உள்ள ரியாத் நகரில் பஸல் இரிட்டி(35), முஸ்தபா குன்னத்(33), ஷாகீர்(36) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
(India) கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் மூவருக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரை சேர்ந்த அஷ்ரப் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் அஷ்ரப் கொல்லப்பட்டார். அவரது பிணத்தை ஒரு குப்பை கிடங்கில் புதைக்க முயன்றபோது, ரோந்து வந்த போலீசாரிடம் இவர்கள் மூவரும் பிடிபட்டனர்.
இது தொடர்பாக நடைபெற்று வந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களை உயிருடன் விடுவித்து இந்தியாவுக்கு அழைத்துவர உதவிட வேண்டும் என கேரளாவில் உள்ள அவர்களது உறவினர்கள் மாநில முதல் மந்திரி உம்மன் சாண்டி, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தொடர்ந்து 6 ஆண்டுகளாக முறையீடு செய்து வந்தனர்.
இதற்கிடையில், சவுதியில் உள்ள கொடைக் குணம் கொண்ட ஒரு இந்திய தொழிலதிபரும் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் இரிட்டி, முஸ்தபா குன்னத், ஷாகீர் ஆகியோரை மன்னித்து விடுதலை செய்யுமாறு சவுதி அரசுக்கு தெரிவிக்கும்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் வசிக்கும் கொல்லப்பட்ட அஷ்ரப்பின் தந்தையிடம் பேரம் பேசினார்.
இதற்கு சம்மதித்த அஷ்ரப்பின் தந்தை, இறந்த தனது மகனுக்கு இழப்பீடாக 20 லட்சம் ரியால்களை அளித்தால் கொலையாளிகளை மன்னிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவரிடம் நடத்தப்பட்ட பல சுற்று பேரங்களின் விளைவாக 4 லட்சத்து 90 ஆயிரம் சவுதி ரியால்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 80 லட்சம் ரூபாய்) பெற்றுக் கொண்ட அவர், கொலையாளிகளை மன்னித்து விட்டதாகவும், அவர்களை விடுவிப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் சவுதி அரசுக்கு தகவல் அனுப்பினார்.
அந்நாட்டு சட்டப்படி, கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டால் கொலையாளிகளை விடுதலை செய்யும் வாய்ப்புள்ளதால், மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள் மூவரும் ரியாத் நகரில் உள்ள அல்-ஹைர் சிறையில் இருந்து கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர். இன்று அவர்கள் பத்திரமாக கேரள மாநிலத்தை வந்தடைந்தனர்.
Post a Comment