Header Ads



நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது - நவீன்

அரசாங்கத்தில் இருந்து விலகாமல் இருக்க 100 மில்லியன் ரூபா தந்தனர் எனத் தெரிவித்த நவீன் திஸாநாயக்க, இப் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் அவரினால் நியமிக்கப்படும் விசாரணைக் குழுவிடம் தெரியப்படுத்துவேன் எனவும் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து பெறப்படும் கடனுதவிகளில் பாரிய கொள்ளைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று 2.12.2014 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

100 மில்லியன் வழங்கப்பட்டது

நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. என்னைத் தேடி வந்த மூன்று பேர், மேற்படி பணத்தொகையுடன் என்னை அணுகினர். ஆனால் சட்டத்துக்கு முரணான இந்தப் பணத்தை நான் ஏற்க மறுத்து விட்டேன். மேலும் இந்தப் பணம் அரசாங்கம் சார்பிலேயே வழங்கப்பட்டது. பணம் வழங்கியவர்களின் பெயர்களை குறிப்பாக இப்போது கூறமுடியா விட்டாலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் அவரால் நிமிக்கப்படும் விசாரணைக் குழுவிடம் பணம் வழங்க முற்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்துவேன். மேலும் பணம் வாங்கியவர்களின் பெயர்களும் எமக்குத் தெரியும். அதனை நாம் வெளிக்கொணர்வோம்.

கொள்ளையடிக்கப்படும் சீனாவின் கடனுதவி

சீனாவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளில் பாரிய கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 96 கிலோ மீற்றர் கொண்ட தெற்கு அதிவேக வீதியை அமைப்பதற்காக சீனாவிடம் இருந்து 490 மில்லியன் டொலர் கடனாகப் பெறப்பட்டது. ஆனால் ஒரு கிலோ மீற்றர் வீதியமைப்பதற்கு குறைந்தது 2 மில்லியன் டொலர்களே செலவாகும். ஆனால் ஒரு கிலோ மீற்றருக்கு 16.49 மில்லியன் டொலர்கள் செலவானதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாரிய கொள்ளையாகும். இந்தப் பணம் யாரால் சூறையாடப்படுகின்றது. உலக நாடுகளிடம் வாங்கும் கடன்களையெல்லாம் எமது எதிர்கால சந்ததியினரே செலுத்த வேண்டும். ஆனால் இவர்கள் கடனாக வாங்கும் பணத்தினை கொள்ளையடிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தை மறந்து விட்டனர்

தேர்தல் பிரச்சாரங்களை மறந்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்பவர்களை தடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அமைச்சர்களுக்கு பணத்தினை வழங்கி கட்சி மாறுவதை தடுக்க முற்படுகின்றனர். நாட்டு மக்களுக்காக செயற்படும் அமைச்சர்களை இவ்வாறு பணத்தைக் காட்டி தடுத்து நிறுத்த முடியாது.  

ஐ.தே.க.வின் வாக்குகள் மீண்டும் சேர்ந்துள்ளன

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கடந்த காலங்களில் பலர் பிரிந்து சென்றனர். தற்போது பலர் வந்து ஒன்றிணைந்துள்ளனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் ஓரிடத்துக்கு சேர்ந்துள்ளன.

விலகியமைக்கு காரணம்

நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்தேன். ஆனால் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. மேலும் எனக்கு வழங்கிய அமைச்சுப் பதவியை வைத்து மக்களுக்கு சேவைசெய்ய முடியாதநிலை காணப்பட்டது. இதனை பல தடவைகள் சுட்டிகாட்டிய போதும் அதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தீர்மானத்தை எடுத்தேன்.

தேசப்பற்றுள்ள மைத்திரி

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேசத்தின் மீது மிகுந்து பற்றுக்கொண்டவர். ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியில் 10 வருடங்களுக்கு மேல் பொதுச் செயலாளராக செயற்பட்ட இவர், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என நினைக்கவில்லை. இவர் எடுத்த தீர்மானம் வரவேற்கக் கூடியதாகும். இவர் அரசாங்கத்துடன் இருக்கும் போதே பல பிழைகளை சுட்டிக்காட்டுவார். மேலும் தனது 47 வருட அரசியல் பயணத்தில் எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. எனவே இவருக்கு எதிராக எந்தக் குற்றச் செயல்களையும் சுட்டிகாட்ட முடியாது. 

என்னுடைய ஆதரவு உங்களுக்கு

மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராகக் களமிறங்கிய உடனேயே நான் தொலைபேசி மூலம் 'என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கே" என அறிவித்தேன். இவர் பொது வேட்பாளராகக் களமிறங்கியமை எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. 

சர்வதேச சூழ்ச்சி

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட எதிரணியினர் சர்வதேச சூழ்ச்சிக்கு அமைய தமது அரசியல் பயணத்தை கொண்டு செல்கின்றனர் என அரசாங்கத் தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். தேர்தல் விளம்பரத்திற்காக இவ்வாறு கூறி வருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்க அரப்பணிப்புடன் செயற்பட்டவரே மைத்திரிபால சிறிசேன. ஆனால் இன்று அவருக்கு எதிராக இவ்வாறான கதைகள் கூறுவது வருந்தத்தக்கது. 

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத சமயங்களில் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மைத்திரிபால சிறிசேனவே செயற்பட்டார். அவ்வாறு நாட்டுக்கு எதிராக செயற்படுபவர் என்றால் அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம். எனவே இவ்வாறான ஒருவர் நாட்டுக்கு எதிராக தேசத்துரோகியாக செயற்படமாட்டார். நாம் ஒருபோதும் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்பவர்களுடன் இணைய மாட்டோம். எனவே சர்வதேசங்களின் தாளங்களுக்கு மைத்திரிபால சிறிசேன ஆட மாட்டார். 

ரணிலுக்கும் எனக்கும் முரண்பாடுகள் இருந்தன

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தன. தற்போது தீர்வு காணப்பட்டுள்ளன. மக்களின் நலன்கருதி நாம் ஒன்றிணைந்து இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். 

பல அர்ப்பணிப்புகளை செய்தவர் ரணில்

கடந்த கால தேர்தல்களில் பல அர்ப்பணிப்புகளைச் செய்தவரே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. 2005, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக பல தியாகங்களை செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.