மீரியாபெத்தை மக்களின் அவலமும், மறைக்கப்படும் உண்மைகளும்-
(Gtn)
பதுளை ஹல்துமுல்ல கொஸ்லாந்தை மீரியாபெத்தை மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
உயிர் பிழைத்த மக்களை அரசாங்கம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மர்மம் புரியவில்லை என ஊடக வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
சம்பவம் இடம்பெற்று சில தினங்கள் கடந்துள்ள நிலையிலும், மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் 192 பேரைக் காணவில்லை எனவும், ஏனைய ஊடகங்கள் 400 பேரைக் காணவில்லை எனவும் தெரிவித்திருந்தன.
எனினும், தற்போது இந்த எண்ணிக்கைகளில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
30 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், தற்போது ஆறு சடலங்களே இன்று வரை மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த 75 சிறுவர் சிறுமியர் முகாமொன்றில் அடைக்கலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம் அவர்களின் பெற்றோருக்கு என்னவாயிற்று என்ற தகவல்களை வெளியிடவில்லை.
மிகவும் சொற்பளவிலானவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.
குளிக்கச் செல்லக்கூட முகாம்களில் வாழ்ந்து வருவோர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களையோ சிறுவர்களையோ ஏனைய தரப்பினர் சந்திப்பது வரையறுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரை முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு உயிர்ப் பிழைத்த மக்களின் நிவாரணப் பணிகளை முழு அளவில் இராணுவத்தினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
வழமையாக சர்வதேச அளவில் மனிதாபிமான மீட்பு பணிகளில் படையினரே ஈடுபடுத்தப்படுகின்ற பொழுதிலும் மீட்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் சிவில் அமைப்புகள், அல்லது பிரதேசங்களில் உள்ள பொதுநல – அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளே மேற்கொள்வது நடை முறை.
ஆயினும் வடக்கு கிழக்கு மலையக பகுதிகளில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட சமூக தாக்கங்களின் பின் அங்கே படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு சாதாரண நடைமுறைகளிலும் படைத்தரப்பை ஈடுபடுத்தும் புதிய இராணுவ கலாசராம் ஏற்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
மண் சரிவில் புதையுண்ட வீடுகள் மற்றும் மக்களின் மேல் சுமார் 40 முதல் 50 அடிவரையில் மண் குவிந்துள்ளன.
இதேவேளை, மண் சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலா திசைகளிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிவாரணங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேரடியாக மக்களை சந்தித்து அவற்றை அவர்களின் கைகளில் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நிவாரணப் பொருட்களை அரசாங்க அதிகாரிகளின் ஊடாகவே வழங்க வேண்டியுள்ளது.
பொருட்கள் விநியோகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நிவாரணப் பொருட்கள் சில இடங்களில் குறைந்த விலையில் விற்கப்பட்டு பணமாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ரீதியான தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நன்மதிப்பை உயர்த்திக் கொள்வதிலும் விளம்பரம் செய்வதிலும் அதீக கரிசனை கொண்டுள்ளனர்.
இலங்கையின் சில ஊடக நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டுள்ளமை வருத்தமளிப்பதாக புத்திஜீவிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரச்சாரத்தையும் விளம்பரத்தையும் செய்வதில் அநேகர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை அருவருக்கத்தக்கது என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment