Header Ads



அமைச்சர்களின் மோசடிகளை அநுரகுமார வெளிப்படுத்தியதால், பாராளுமன்றத்தில் குழப்பம்


அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கருத்துக்கூறிய போது சபையில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

தமது உரையின் போது அநுரகுமார திஸாநாயக்க, லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு சுயாதீனமானதல்ல என்று குறிப்பிட்டார்.

அந்த ஆணைக்குழுவிடம் பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வா, அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து தொடர்பில் தமது விமர்சனத்தை வெளியிட்டார்.

இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பதிலுக்கு விமர்சனங்களை வெளியிட்டார்.

இந்த விமர்சனங்கள் தொடர்ந்தபோது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் அதில் இணைந்துக்கொண்டார்.

இதன்போது கிறிஸ் நோனிஸை, சஜின் வாஸ் தாக்கிய சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆட்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கடத்திச் சென்று விட்டனர் என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

அமைச்சர்களின் ஊழலை துகிலுரிந்த அனுர திசாநாயக்க

முக்கிய அமைச்சர்கள் 38 பேரின் ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அனுர குமார திசாநாயக்க வெளிப்படுத்த முற்பட்டபோது நாடாளுமன்றம் கடும் அமளிதுமளிக்குள்ளானது.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் மற்றும் மோசடி விபரங்கள் தொடர்பில் ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்தினார்.

ஆளுங்கட்சி என்ற வார்த்தை வந்தாலே பாய்ந்து எழுந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் அஸ்வர் எம்.பி. இன்றும் தனது கடுமையான கூச்சலில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து சஜின் வாஸ், ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோரும் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது சபையில் கடும் அமளிதுமளி நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது அனுர விட்ட இடத்திலிருந்து தனது உரையைத் தொடர்ந்தார்.அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இருப்பதாக அவர் தனது உரையின்போது தெரிவித்தார்.

அனுரவின் உரையின் ஆரம்பத்தில் ஆளுங்கட்சியின் சிலர் கூச்சலிட்ட போதிலும், அவரது உரையின் முடிவில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் மேசையில் தட்டி தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.