முஸ்லிம் வாக்குகளுக்காக ஏமாற வேண்டாம்- அரசாங்கத்திடம் ஹெல உறுமய கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க நிபந்தனையாக கல்முனை மாவட்டத்தை தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டமாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடுமையாக நிராகரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நாட்டின் மாவட்டங்களை இவ்வாறு இன ரீதியாகவும், மத அடிப்படையிலும் பிரித்து வேறுப்படுத்தும் யோசனைகளை கண்டிப்பதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிபந்தனைகளின் அடிப்படையில் முஸ்லிம் வாக்குகளுக்காக ஏமாற வேண்டாம் என எமது கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தேர்தல் தொகுதிகளை இணைத்து தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த யோசனைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். அதேவேளை இது தேசிய பாதுகாப்புக்கும் இனங்களுக்கு இடையிலான இணக்கப்பாடுகளுக்கும் பாரதுரமான அச்சுறுத்தலை விடுக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
முஸ்லிம் மாவட்டத்தை கோருவதானது முஸ்லிம் மக்களை ஏனைய மக்களிடம் இருந்து பிரிக்க திட்டமிடும் துஷ்ட இனவாத மற்றும் அடிப்படைவாதத்திற்கு ஆதரவு வழங்கும் செயல்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் இருந்தே முஸ்லிம் பிராந்தியம் குறித்து குரல் கொடுத்து வருவதுடன் ஒலுவில் பிரகடனம் மூலம் முஸ்லிம் மக்களின் அடிப்படைவாத கோரிக்கை முன்வைத்தது எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
Post a Comment