Header Ads



நாம் பொறுப்புள்ள அரசங்கம், எமது பொறுப்பை நாம் ஒருபோதும் தட்டிக் கழித்ததில்லை - ஜனாதிபதி மஹிந்த

கிராமங்கள் முன்னேற்றமடைந்தால் தமது இருப்புக்கும் நாற்காலிக்கும் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று நினைப்பவர்களே அபிவிருத்திச் செயற்பாடுகளை விமர்சிக்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சேறு பூசும் குரோத அரசியலே தற்போது நாட்டில் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதைச் செய்தாலும் குரோதம் வைராக்கியத்துடனும் எரிச்சலுடனும் நோக்குகின்றவர்களே அநாவசியமான விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பல்லாயிரம் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, வெளிநாடுகள் தமது தேவைகளை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஐரோப்பிய யூனியன் புலிகளை தடை நீக்கினால் நாம் பயந்து ஒதுங்கி அவர்களுக்கு அடிபணிவோம் என்று வெளிநாடுகள் நினைக்கின்றன எனினும் அது ஒருபோதும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புத்தளத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாம் பயங்கரவாத யுத்தத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள் ளோம். மூன்று வருடங்களில் முடித்திருக்கக் கூடிய பயங்கரவாத யுத்தத்தை 30 வருடங்களுக்கு இழுத்து யுத்தத்தை விற்றுத் தின்றார்கள்.

நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தையும் நிம்மதியான வாழ்க்கையையும் பெற்றுக் கொடுப்பதா அல்லது வெளிநாடுகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிவதா என்ற சவாலை எதிர்நோக்க நேர்ந்தபோதே நாம் மக்களுக்கான சுதந்திரமே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘நமக்காக நாம்’ படையினருக்கான வீடமை ப்புத் திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்ட வீடமைப்புத் திட்டம் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு 101 படையினர் குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தயாஸ்ரீத திசேரா, பந்துல குணவர்தன, எஸ்.எம். சந்திரசேன, பிரதியமைச்சர் விக்டர் அந்தனி பெரேரா உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

புலிகள் மீள தலைதூக்கும் வகையில், ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. அவ்வாறு செய்தால் நாம் நடுநடுங்கி அவர்களிடம் செல்வோம் என அவர்கள் எண்ணிவிட்டார்கள். அப்படி ஒருபோதும் நடக்காது.

இந்த நாட்டுக்காக தமது உயிர்களைப் பலியாக்கியும் அங்கவீனர்களான படையினருக்கு நாம் உரிய கெளரவமளித்து வருகிறோம். சிலர் ஏன் படையினருக்கு மாத்திரம் வீடுகள் வழங்கப்படுகிறது எமக்குக் கிடையாதா” என கேட்கின்றனர் ஏனையோருக்கும் வீடுகள் வழங்கப்படும். நாம் தற்போது கொழும்பில் குறைந்த வசதிகளைக் கொண்ட குடிசை வீடுகளில் வசிப்போருக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்கி வருகின்றோம்.

படையினர் நமக்காக தம் உயிரைப் பணயம் வைத்து யுத்தம் செய்தவர்கள். எமக்கு கண், காது, மூக்கு, கால், கை என அனைத்து அவயங்களும் உள்ளன. அவர்களில் பல பேர் கண்களை இழந்து, கால்களை இழந்து பல்வேறு விதமாக அங்கவீனர்களாக உள்ளதை நாம் பார்க்கிறோம்.

அவர்களைக் கவனிப்பதும் பாதுகாப்பதும் எமது பொறுப்பு அவர்களின் தியாகங்கள் இன்று சிலருக்கு மறந்து விட்டன. குறிப்பாக புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலிருந்தே பெருமளவு இளைஞர்கள் படைகளில் இணைந்து யுத்தம் புரிந்தனர். அவர்கள் நம் அனைவருக்கும் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் பெற்றுத் தந்தவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.

எமது அரசாங்கம் பொறுப்புள்ள அரசங்கம் எமது பொறுப்பை நாம் ஒருபோது தட்டிக் கழித்ததில்லை. மூன்று வருடங்களில் முடிக்கக் கூடிய யுத்தத்தை 30 வருடங்களுக்கு இழுத்து யுத்தத்தை விற்றுத் தின்றவர்கள் பற்றி நாம் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. மக்கள் அதனை நன்குணர்வர்.

கடந்த பத்து வருடத்தில் நாடு பாரிய மாற்றம் அடைந்துள்ளது. சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது எதிர்கால சந்ததியினருடன் கல்விக்காக நாம் பல்வேறு திட்டங்களை மேற் கொள்கிறோம். இப்போது கொழும்பில் கற்கும் மாணவர்களோடு போட்டி போடும் அளவிற்கு கிராமப்புற மாணவர்கள் முன்னேறியுள்ளனர்.

நாம் 2005ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது எமது மக்களிடையே கணனி அறிவு 3 வீதமாகவே இருந்தது. இது தற்போது 50 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று கிராமப் புறங்களில் வாழ்பவர்கள் காலையில் பத்திரிகை வாசிப்பதும், கொழும்பு விலை வாசி நிலவரங்களை அறிந்து கொள்வதும் கணனி மூலமே. நகரங்கள் போன்று கிராமங்களும் அந்தளவு மாற்றம் கண்டுள்ளன என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

புத்தளத்திற்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி ஆனமடுவ மாவுஸ்வெல ரத்னபால வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய ஆய்வு கூடத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

1 comment:

  1. Yes,

    Your Responsibility was clearly proved by Feeding BBS to destroy religious places of minorities in this country and protecting all wrong doors of your party.

    Time has come for a change..

    ReplyDelete

Powered by Blogger.