வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களை ஒழுங்கமைக்கின்ற “கொள்கைத் தீர்மானங்கள்”
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் விதத்தில், ஒரு முறையான திட்டமிடல் அவசியம் என பல்வேறு மட்டங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. அத்தகைய திட்டமிடல்களுக்கு அடிப்படையாக வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களை ஒழுங்கமைக்கின்ற “கொளைகைத் தீர்மானங்கள்” அவசியப்படுகின்றன.
இதன்பொறுட்டு வடக்கின் சிவில் சமூகத்தவரை நோக்கி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பின்வரும் அடிப்படையான கொள்கைத் தீர்மானங்களை முன்மொழிகின்றது.
இம்முன்மொழிவுகளின் அடிப்படையில் வடக்கின் முஸ்லிம், தமிழ், சிங்கள சிவில் சமூகங்கள் வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களை அணுகுவதற்கான திட்டமிடல்களை, தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
தாயக மண்ணில் மீளக்குடியேற்றமே வடக்கு முஸ்லிம்களின் சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்குமான அடிப்படைத் தீர்வு என வடக்கு முஸ்லிம்களாகிய நாம் நம்புகின்றோம், அதுவே முதன்மையானது என்றும் தீர்மானிக்கின்றோம். எமது வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை, வாக்குரிமை, கல்வி உரிமை, மத கலாசார உரிமைஅனைத்தும் வடக்கையே சார்ந்திருக்கின்றது.
வடக்கு முஸ்லிம்களினதும் தாயகம், பூர்வீக வாழிடம் 1990களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைவரினதும், அவர்களது சந்ததியினரதும் வாழிடமாக பூர்வீக பிரதேசமாக வடக்கே இருக்கின்றது, அவர்கள் அனைவரும் மீளவும் குடியேறவும், வாழிடங்களை ஒழுங்கமைக்கவும், வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடவும் முழுமையான உரித்துடையவர்கள்.
1990களில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்த வாழிடக் காணிகள், விவசாய நிலங்கள், சமூகவாழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும், அத்தோடு அவர்களது 20வருட கால இடைவெளியில் ஏற்பட்ட சனத்தொகைப் பரம்பலுக்கு அமைவான ஒதுக்கீடுகளும்அவர்களது வாழிடங்களுக்கு அன்மித்ததாக ஒழுங்கமைக்கப்படவேண்டும்.
“மீள்குடியேற்றமே வடக்கு முஸ்லிம்களின் அடிப்படைத் தேவை” என்றவகையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான காணி, வீடமைப்பு, வாழ்வாதார ஒத்துழைப்புகள், தொழில் வாய்ப்புகள், சமூக நிறுவனங்கள், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் என்பன எவ்வித பாரபட்சமும் இன்றி மீள்குடியேறும் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும். இதனை மத்திய மாகாண அரசுகள், தேசிய சர்வதேசிய தொண்டு நிறுவனங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டதாக பொறுப்பேற்றுக்கொள்தல் வேண்டும்.
வடக்கு முஸ்லிம்கள் எமது பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்களுடன் நல்லிணக்கமான வாழ்வையே எதிர்பார்த்திருக்கின்றார்கள், இப்பிரதேசத்தில் நீண்டகாலமாக தமது உரிமைகளுக்காக போராடுகின்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களது வன்முறையற்ற போராட்ட ஒழுங்கில் காணப்படுகின்ற நியாயத்தன்மையினையும் வடக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கின்றார்கள்; ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் சுதந்திரமாக வாழ்கின்ற ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கின்றார்கள், இந்த அடிப்படையில் வடக்கு முஸ்லிம்கள் சமூக நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதிபூணுகின்றார்கள்.
Post a Comment