''இனிமேல் எமது கட்சிக்கு, பதவிகள் மீதான எதிர்பார்ப்பு இருக்கமாட்டாது'' ரவூப் ஹக்கீம்
இனிமேல் எமது கட்சியைப் பொறுத்தமட்டில் பதவிகள் மீதான எதிர்பார்ப்பு இருக்க மாட்டாது. அவ்வாறன்றி எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காண முடியாது
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை (2) பொத்துவில் பசறிச்சேனை பத்ரியா பள்ளிவாசலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையில் தெரிவித்தார்
மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத அரசில் தொடர்ந்தும் நீடிக்கக் கூடாது என்ற அங்கலாய்ப்பு எமது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது.
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் முக்கியமான தேசிய மட்டத் தேர்தல் நடைபெறலாமென்ற நிலையில், எமது கட்சியின் தயவை நாடியிருக்கிற எந்த தரப்பாக இருந்தாலும், எமது மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த சரியான அறிவித்தலில்லாமல் இந்தக் கட்சியை மீண்டும் ஒரு முறை போடுகாயாகப் பாவிக்கலாம் என யாராவது நினைத்தால் அது நடக்கமாட்டாது என்பதை மிகத்திட்டவட்டமாக கூறிவைக்கின்றேன்.
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவது, பாராளுமன்றத் தேர்தலில் யார் போட்டியிடுவது, மாகாண சபைகளில் யார் யார் ஆட்சியிலிருப்பது, யார் யார் பதவிகளுக்கு வருவது என்பவற்றில் தான் அநேகருக்கு நாட்டமிருப்பதாக எனக்கு தெரிகிறது.
எனவே இங்கு ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன். இனிமேல் எமது கட்சியைப் பொறுத்தமட்டில் பதவிகள் மீதான எதிர்பார்ப்பு இருக்க மாட்டாது. அவ்வாறன்றி எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காண முடியாது. இது தொடர்பில் பலவிதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தவண்ணமுள்ளன.
இது பலவிதமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்ற காலமாகும். இவற்றுக்கு மத்தியில் சரியான தீர்வு வந்தாக வேண்டும்.
சனிக்கிழமை பாரளுமன்றத்தில் அரசாங்கத்தில் இருக்கின்ற ஒரு கட்சி வாக்களிக்க வரவில்லை என்பதால் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்தது என்பதனால் சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. இன்னும் ஒரு கட்டம் எஞ்சியிருக்கிறது. அதற்கு அப்பாலும் ஒரு முக்கியமான தேர்தல் வர இருக்கின்றது. எனவே முஸ்லிம் காங்கிரசின் வாக்குகள் பெறுமானமுள்ளவையாக கணக்கில் எடுக்கப் படுவதற்கான ஒரு நிலைமையில்லாமல் நாங்கள் தீர்மானத்திற்கு வரமாட்டோம் என உறுதியாகக் கூறுகின்றேன்.
மிகவும் தீர்க்கமான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டிய காலம் நெருங்கி வருகிறதென்பதை நீங்கள் உளம் கொள்ளவேண்டும். கட்சி தனது தார்மீக பொறுப்பை உரிய முறையில் சரியாக நிறைவேற்றுவதற்கு தயாராகி வருகின்றது. இந்தக் கட்சிக்குள் நிலவும் ஒற்றுமையைக் குலைப்பதற்கு யார் நினைத்தாலும் அதற்கு இடமளிக்காமல் விடயங்களைச் சாதித்துக் கொள்வதில் தான் எமது சாணக்கியம் உள்ளது என்றார்.
இந் நிகழ்வில் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நசீர், தவம், ஜெமீல், கல்முனை மா நகரசபை பிரதி மேயர் அப்துல் மஜீத், பொத்துவில் பிரதேச சபை தலைவர் வாசித், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் முபாறக் உட்பட பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஆயுள் கால தலிவராக இருக்க நினைக்கிறார் போலும். இந்த பூச்சாண்டி இனிமேல் நடக்காது என்பதே ஊவா தேர்தல் பாடம் புகட்டியது .உங்களுக்கு முடியாவிட்டால் ஒதுங்கி கொள்ளுங்கள் .
ReplyDeleteராஜபக்சவை போல் சொல்வது ஒன்று நடப்பது ஒன்று. இவர்கள் இருவரும் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.
ReplyDelete