போகோ ஹரம் ஆயுததாரிகளுடன் போர் ஒப்பந்தம்
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14–ந்தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹரம்கள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர்.
இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியது.
கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் தப்பி ஓடி வந்துவிட்ட நிலையில், போக்கோ ஹரம்களின் பிடியில் தற்போது 219 மாணவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் நைஜீரிய அரசு திணறும் அதே வேளையில், கடத்தப்பட்டு 6 மாதங்களாகியும் மாணவிகளை மீட்க முடியாத நைஜீரிய அரசின் கையாலாகாதத்தனத்துக்கு உலகெங்கிலும் உள்ள பெண்ணுரிமை இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், போக்கோஹரம்களுடன் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாகவும், கடத்தப்பட்ட 219 மாணவிகளை பத்திரமாக உயிருடன் மீட்பது தொடர்பாகவும் நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனாத்தனின் முதன்மை செயலாளர் ஹசன் டுக்கூர் சமாதான பேச்சுவார்ததைக்கு ஏற்பாடு செய்தார்.
இதன் ஒருகட்டமாக ராணுவத்தினர் மீது நடத்தும் தாக்குதலை கைவிடுவதாக போக்கோஹரம்கள் உறுதியளித்துள்ளதாகவும், கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாகவும் ஹசன் டுக்கூர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போக்கோஹரம்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அந்நாட்டின் ராணுவ தளபதி அலெக்ஸ் படே-வும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment