தேர்தல் உங்களுக்கு பாதகமாக அமையும் - மஹிந்தவிடம் நேரடியாக கூறிய மூத்த அமைச்சர்
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப் போவதாகவும் அதற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 10 ஆம் திகதி நடைபெறுமென கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற அரசின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் சூட்சகமாக தெரிவித்ததாகவும் அக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசின் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் Vi குத் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்த பின்னர் இடதுசாரிக்கட்சிகள் ஜனவரி மாதம் தேர்தலை நடத்துவது. அரசுக்கு பாதகமாக முடியுமெனத் தெரிவித்த போதும் ஜனாதிபதி ஜனவரி மாதம் தேர்தலை நடத்துவதில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான டியூ.குணசேகர ஜனாதிபதி தேர்தல் குறித்து தான் ஆய்வொன்றை மேற்கொண்டதாகவும் ஆய்வு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதி "நீங்கள் ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவுகளை எனக்கு வழங்காமல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியுள்ளீர்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தல் குறித்து நானும் ஆய்வொன்றை மேற்கொண்டேன். அந்த ஆய்வு எனக்கு ஆதரவாகவுள்ளது" என்று அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு பதிலளித்துள்ளாதாகத் தெரியவருகிறது.
கடந்த 15 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் தலைவர் அத்துரலிய ரத்தன தேரருக்கு பதிலாக மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில கலந்து கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக பதவியேற்று எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையில் நாடு முழுவதுமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களின் கூட்டமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றுள்ளது.
இக் கூட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு தொகுதி அமைப்பாளர்களை கேட்டுக்கொண்டதாகத் தெரியவருகிறது.
Post a Comment