Header Ads



தனிபர் ஆளுமையும், விசுவாசமுமே தேர்தல் முடிவில் முக்கிய இடம் வகிக்கப்போகின்றன...!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதை எதிர்த்து முன்னாள் பிரதம நீதியரசரும் மக்கள் விடுதலை முன்னணியும் சட்டப் பிரச்சினை கிளப்புவதையிட்டு பிரதான அரசியல் கட்சிகளும் பெருமளவு மக்களும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. பொது வேட்பாளர் என்ற கதை இப்போது ஓய்ந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரசாரத்திலும் முக்கியத்துவம் வகிக்கப் போவது எது என்பது பற்றி வெவ்வேறு ஊகங்கள் வெளிவருகின்றன. இரண்டு வேட்பாளர்களும் பல விடயங்களில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரே பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுபவர்கள். தேசிய இனப் பிரச்சினையிலும் இவர்களுக்கிடையே வேறுபாடு இல்லை. பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மகிந்த விரும்பவில்லை. தனது அரசாங்கம் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லாது என்று கூறும் ரணில், அத்திருத்தம் (சில சரத்துக்களை நீக்கும் வகையில்) திருத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். சிங்கள பௌத்தம் என்பதிலும் வேறுபாடு இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பௌத்த அடிப்படையைக் கொண்டது என்று பிரேமதாச காலக்கட்சி முக்கியஸ்தரான சிறிசேன கூரே அண்மையில் கூறினார். இப்போது பிரதித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சஜித் பிரேமதாசவும் இதே கருத்தையே கொண்டவர். 

இரண்டு வேட்பாளர்களும் வித்தியாசமாக எதைச் சொல்லப் போகிறார்கள் என்பது பெரிய கேள்வி. மகிந்த ராஜபக்ஷ இரண்டு விடயங்களைப் பிரதானமாகக் கையாளலாம். அவரது அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் ஒரு விடயம். புலிகளைத் தோற்கடித்துப் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மேற்கத்திய நாடுகள் தனக்கு தண்டனை வழங்க முயற்சிக்கின்றன என்று சிங்கள மக்களின் இன உணர்வைத் தொட்டுப் பேசுவது மற்றது. இடைக்கிடை புலிப் பூச்சாண்டியையும் கிளப்பலாம். அபிவிருத்தி தான் உருப்படியான விடயம். அது உண்மையிலேயே அவருக்கு ஒரு "கிறெடிற்'. ஊழலற்ற ஜனநாயக ஆட்சி என்று ரணில் வாக்குறுதி அளிக்கலாம். இவ்வாறான வாக்குறுதிகளை மக்கள் கடந்த காலச் செயற்பாடுகளுடன் பொருத்திப் பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடனேயே எல்லாத் தலைவர்களும் வாக்குறுதிகளை அளிக்கின்றார்கள். 

ஜாதிக ஹெல உறுமயவின் பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்த ஆலோசனைகøளை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிப்பதாக ரணில் கூறுகிறார். நல்லாட்சிக்கான கருத்துகள் அதில் அடங்கியிருக்கின்ற அதேவேளை சிறுபான்மையினரிடம் கசப்புணர்வை ஏற்படுத்தும் அம்சங்களும் இருக்கின்றன. இன அடிப்படையிலோ பிரதேச அடிப்படையிலோ உள்ள தனிச் சட்டங்களை நீக்கி நாடு முழுவதற்கும் பொதுவான சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும் என்பது ஹெல உறுமயவின் ஆலோசனைகளுள் ஒன்று. இதன்படி தேச வழமைச் சட்டம், முஸ்லிம்களுக்கான பிரத்தியேக சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். இரண்டு வேட்பாளர்களும் சிங்களக் கடுங்கோட்பாட்டு வாக்குகளில் கண் வைத்திருக்கிறார்கள். மகிந்த ராஜபக்ஷவுக்கு சிங்களக் கடுங்கோட்பாட்டு வாக்கு வங்கியொன்று எப்போதும் இருக்கின்றது. அதேபோல சஜித் பிரேமதாசவுக்கும் சிங்கள பௌத்த ஆதரவுத் தளமொன்று உண்டு.  

சஜித் பிரேமதாச மூலம் இந்த வாக்குகளைப் பெறுவது ரணிலின் நோக்கம். எந்த வேட்பாளராவது சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளுக்கு அல்லது விசேட சலுகைகளுக்கு விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரத்திலோ அழுத்தம் கொடுத்தால் சிங்கள வாக்குகளைப் பெருமளவில் இழக்கும் நிலை உருவாகுமென்பதால் இரண்டு  வேட்பாளர்களும் இவ்விடயத்தில் அவதானமாகவே இருப்பார்கள். இது ஒரு ஆரோக்கியமற்ற வளர்ச்சிப் போக்கு. இது சிங்களக் கடுங்கோட்பாட்டு வளர்ச்சியின் விளைவு. இந்த நிலை உருவாகியதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி இடதுசாரிகளும் தமிழ்த் தலைமையும் கூடப் பொறுப்பேற்க வேண்டும். பிரதான அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் சிங்கள மக்களின் இன உணர்வைத் தூண்டி அரசியல் இலாபம் பெற இமுயற்சித்திருக்கின்றன. தேசிய ஐக்கியத்தை அடித்தளமாகக் கொண்டு இக்கட்சிகள் செயற்பட்டிருந்தால் இந்த நிலை தோன்றியிருக்காது. இவர்களே உருவாக்கிய பொறிக்குள் இன்று இவர்கள் அகப்பட்டிருக்கின்றார்கள். 

இடதுசாரிக் கட்சிகளின் செயற்பாடு நிதானமாக சிந்திக்கின்ற மக்கள் கூட்டமொன்றை தென்னிலங்கையில் தோற்றுவித்தது.  சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளுக்கும் தேசிய ஐக்கியத்துக்கும் முன்னுரிமை அளித்துச்  செயற்பட்ட இடதுசாரிக் கட்சிகள் முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையில் ஆரம்பித்து முதலாளித்துவத்துக்குள் சங்கமமாகும் சந்தர்ப்பவாத அரசியலைப் பின்பற்றியதும் தமிழ்த் தலைமை தேசிய அரசியலிலிருந்து முற்றாக விலகி யதார்த்தத்துக்கு முரணான அரசியலை முன்னெடுத்ததும் சிங்களக் கடுங்கோட்பாட்டு சிந்தனையின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. இது தனியான ஆய்வுக்குரிய விடயம். ஓரிரு விடயங்களைத் தவிர தேசிய இனப் பிரச்சினை, பொருளாதார செவ்வழி, சிங்கள பௌத்த நிலைப்பாடு போன்றவற்றில் இரண்டு வேட்பாளர்களும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருப்பதால் மாறுபட்ட கொள்கைகளுக்கிடையிலான போட்டியாக இந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போவதில்லை. சாதனைகளும் தனிபர் ஆளுமை மற்றும் விசுவாசமுமே தேர்தல் முடிவில் முக்கிய இடம் வகிக்கப்போகின்றன.

No comments

Powered by Blogger.