அரசாங்கத்துக்கு ஆதரவான வாக்குகள் குறைந்துள்ளது உண்மைதான் - டிலான் பெரேரா
அரசுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ரத்ன தேரர், அரசாங்கத்துக்கே தொடர்ந்தும் ஆதரவளிப்பார் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இன்று அதிகாலை கொழும்பு டுடே செய்திச் சேவையுடன் தொலைபேசி வழியாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆதரவான வாக்குகள் குறைந்துள்ளது உண்மைதான். அதேபோன்று ஐ.தே.க.வுக்கும் வாக்குகள் குறைந்துள்ளது. வடக்கில் ஐ.தே.க.வுக்கு சுத்தமாக வாக்குகள் கிடையாது.
அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்திலும், அரசாங்கம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆக வாக்குகள் குறைந்திருப்பது எதிர்க்கட்சிக்குத்தான் பாதகமாக இருக்கும். எந்தவொரு அரசாங்கத்திலும் இருக்கும் பங்காளிக்கட்சிகள் எப்போதும் அதிக பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கூப்பாடு போடுவது வழமையானது.
அதன் மூலமே அவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் விமல் வீரவங்ச புத்திசாலித்தனமாக முடிவெடுத்து, அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
அதேபோன்று ஹெல உறுமயவும் இப்போது சிற்சில பிரச்சினைகளை முன்வைத்து கருத்துக்களை வெளியிடுகின்றது. அதன் முக்கியஸ்தர் ரத்ன தேரர் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுகின்றார்.
ஆனாலும் அவர் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் இந்த அரசாங்கம் தவிர வேறு யாருக்கும் ஆதரவளிக்க மாட்டார் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
Post a Comment