Header Ads



அரசாங்கத்தின் கொந்தராத்துகாரர்கள் எம்மை வந்து சந்திக்கின்றனர் - ஆசாத் சாலி

அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிநாடுகளில் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில் அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

அரசாங்கத்தின்  அமைச்சர்களின் வெளிநாட்டு சந்திப்புக்கள் பற்றி  பலமாகக்  கதை அடிபடுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் தடுமாறி வருகின்றது. வரவுசெலவுத்திட்டம் வழமையாக நவம்பர் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். ஆனால் இம்முறை வரவுசெலவுத் திட்டம்  ஒக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்டது ஏன்? இந்த வரவு செலவுத் திட்டத்தை ஒக்டோபர் மாதம் கொண்டுவந்திருக்காவிட்டால் அரசாங்கம் நெருக்கடியை  சந்தித்திருக்கும்; என்பது நிச்சயம். 

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் 16 ஆம் திகதி அறிவித்து ஜனவரி 10 ஆம் திகதி   நடாத்த தயாராகியுள்ளது. இதற்காக அரச வளங்களையும் அரச அதிகாரிகளையும் பயன்படுத்த முற்பட்டுகின்றது.   எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு  உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் நிதி வழங்கப்படுகின்றது. 

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபா சிறு செலவுத் தொகையாகவும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 10 மில்லியன் ரூபா வீதமும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  40 மில்லியன் ரூபா வீதம் என்று வழங்கப்படுகின்றது. இப்பணம் எங்கிருந்து வருகின்றது. இவை யாவும் தேர்தலை  முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும். நாட்டில் ஒவ்வொரு பிரஜையும்  3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கு கடனாளியாகியுள்ள நிலையில் இப்பணம் எப்படி வருகின்றது என்பதைப் பற்றி மக்கள சிந்திக்க வேண்டும். 

அரசாங்கத்தின் கொந்தராத்துகாரர்கள் எம்மை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களுக்கு நிதி கிடைக்கவில்லை என்கின்றனர். அரசாங்க நிறுவனங்கள் நெருக்கடியில் இயங்கி வருகின்றன. அரச நிறுவனங்கள் வழங்கும் காசோலைகள் வங்கிகளால் மறுக்கப்படுகின்றன. அரசாங்கம் கொந்தராத்துக்காரர்கள் மூலம்  கொடுக்கல் வாங்கல் செய்வதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கம் கொந்தராத்துக்காரர்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் நன்மையடைவதில்லை. 

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தனக்கு ஆறில் ஐந்து பலம் இருந்தும் மூன்றாவது முறை தேர்தலுக்கு செல்லவில்லை. அவர் கையில் பாராளுமன்றத்தின் அதிகாரம்  இருந்தது. ஆனால் அவர் அரசியல் கட்சிகளை உடைக்கவில்லை.  அவர் தனது பதவிக்காலத்தை மூன்று தடவைகளாக அதிகரித்துக் கொள்ள முற்படவுமில்லை. சந்திரிக்கா குமாரதுங்க  ஜனாதிபதியாக வந்த போது அவருக்கு மேலதிகமாக ஒரு ஆசனம் மட்டும் இருந்தது. ஆனால் 11 வருடங்கள்  ஜனாதிபதியாக இருந்து செயற்பட்டார். இன்றைய ஆட்சியாளர்கள் மூன்று தடவைகள்  அல்ல முழு ஆயுட்காலமும் ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புகின்றனர். 

பொதுபல சேன நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்வரும் தேர்தலில் நிறுத்த சிங்கள பௌத்த தலைவர்கள் எம்மிடம் உள்ளனர். அவர்களை  நேரம் வரும் போது வெளிப்படுத்துவோம். அத்துடன்  எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்கின்றனர். இதைத்தான் நாம் அன்று எடுத்துக் கூறினோம். இவர்கள் சிங்கள பௌத்த நாடு , சிங்கள பௌத்த தலைவர் என்று கூறி அரசியல் நடாத்த முற்படுகின்றனர். மேலும்  பௌத்த பிக்குகள் தேர்தலில் போட்டியிட மாட்டாhர்கள் அதற்குப் பதிலாகப் போட்டியிடக்கூடியவர்கள் எம்மிடம் உள்ளனர் என்கின்றனர். அப்படியாயின் இவர்கள் இனவாதத் தலைவர்களை உருவாக்கியுள்ளனர் என்றுதான் அர்த்தம். இதனை நோக்கும்  போது நாட்டின் போக்கு நினைத்துப் பார்க்க முடியாத நிலை உள்ளது. 

நாம் பொதுபல சேனா கொரியாவில் நிதி திரட்டியதாக எடுத்துக் கூறினோம். ஆனால் இன்று வரை எவரும் நிதி கொடுத்ததை அல்லது நிதி பெறப்பட்டதை மறுக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் மூலம் பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாசல்கள் நிர்மானிக்கப்படுவது பற்றியும் நிதி எவ்வாறு கிடைக்கின்றது என்றும் விசாரனை செய்கின்றனர். இவர்களை யார் பள்ளிவாசலுக்கு அனுப்புகின்றனர். 

நாடு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைக்கு முகங் கொடுக்கப்போகின்றது. அரசாங்கம் நாட்டை பரிபாலனம் செய்ய முடியாவிட்டால்  இக்கட்டான நிலைக்குச் செல்லும் என்பதில் ஐயமில்;லை. கடந்த முறை ரணில் விக்கிரமசிங்கவிடம் இரு வருடங்கள் ஆட்சியை ஒப்படைத்த போது அவர் நாட்டின் கடன்களை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதனால் அவரால் அரச நியமனங்கள் தொழில் வழங்க முடியவில்லை. அவரின் இருவருடங்கள் நாட்டை கட்டியெழுப்பவே பயன்படுத்தப்பட்டது. இதேபோல் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்று  ஜே.வி.பியும் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்கின்றது. நாட்டில் கப்பம் ,  ஊழல் அதிகரித்துள்ளது. 

No comments

Powered by Blogger.