Header Ads



தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூலம், முஸ்லிம் காங்கிரஸை வளைத்துப்போட ஐ.தே. க. நாடகம்

(Tw)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் கூட்டுச் சேர்வது என்பது மக்களை ஏமாற்ற முயலும் வெறும் கண்துடைப்புக் கபட நாடகம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந் தசங்கரி தெரிவித்துள்ளார். இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் காய் நகர்த்தலாகவே கொள்ள வேண்டயுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாக முஸ்லிம் காங்கிரஸை வளைத்துப்போட ஐக்கிய தேசியக் கட்சி நடத்தும் நாடகமே இது.

ஆனால் தமிழ்க் கூட்டமைப்பை முஸ்லிம் காங்கிரஸ¤ம், முஸ்லிம் காங்கிரஸை தமிழ்க் கூட்டமைப்பும் ஒரு காலத்திலும், இம்மியளவும் நம்பமாட்டாது. அதனால் இது ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் அவர் தெரிவித்தார். இவ்விரு கட்சிகளும் தமக்கிடையே ஒருகூட்டை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறித்துக் கேட்டபோதே ஆனந்தசங்கரி இவ்வாறு கூறினார். ஒருவேளை இக்கூட்டு சேர்ந்தாலும் அது கூட்டாக அல்ல கூத்தாகவே இருக்கும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் குறித்து இதுவரை தமிழ்க் கூட்டமைப்பு ஆக்க பூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்க வில்லை. இது முஸ்லிம் மக்களிடையேயும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடையேயும் பலத்த எதிர்ப்பலையை உருவாக்கியிருக்கிறது. அதேபோன்று கிழக்கு மாகாணசபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் உதவவில்லை என்பதை தமிழ்க் கூட்டமைப்பு தலைமை உட்பட உறுப்பினர்கள் மறக்காமலுள்ளனர். இதனை விட இரு கட்சிகளிடையேயும் ஒன்றுக்கொன்று வெளிக்காட்டா உட்பூசல்கள் நிறையவே உள்ளன. அதனால் சம்பந்தனும் ஹக்கீமும் இணைவார்கள் என நான் துளியளவும் நம்பவில்லை எனவும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

அதனை விடவும், இக்கூட்டுத் தொடர்பான பேச்சு எழுந்தவுடனேயே இரு கட்சிகளுக்குள்ளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெரும் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

தலைவர்கள் சிலரது இம்முடிவிற்கு இரண்டாம் கட்டத் தலைவர்களோ தொண்டர்களோ அல்லது ஆதரவாளர்களோ தயாரில்லை என்பது நன்கு புலனாகிறது. இதனால் பேசத்தலைப்பட்ட தலைவர்கள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.

அதனால்தான் பேசத் தயார் வாருங்கள் பேசுவோம் என அழைத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இறுதியில் தலைவலி என சந்திப்பைத் தவிர்த்து விட்டார். அதேபோன்று அடுத்த பேச்சுக்கான அழைப்பில் பதிலுக்குச் சம்பந்தனுக்கும் நிச்சயம் தலைவலிவரும்.

இவர்களது இந்த நாடகங்களைப் பார்த்து மக்கள் மயங்கி விடக் கூடாது. இவர்கள் இணைவதால் தமக்கு விமோசம் என தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ நினைத்து விடக் கூடாது.

உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் இந்நாட்டிலுள்ள மக்கள் அனைவரதும் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இன, மத, மொழி வேறுபாடுகள் எதுவுமின்றி மக்களுக்குச் சேவை செய்து வருகின்றது. அதனால் மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயற்பட முன்வர வேண்டும் எனவும் ஆனந்த சங்கரி கூறினார்.

No comments

Powered by Blogger.