''பெரும்பான்மைக்கு கொடுத்து, எடுக்கின்ற போக்காக இருக்க வேண்டும்'' - பஷீர் சேகுதாவூத்
(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் அறத்தை மறுத்துவந்த அரசியலே ஆட்சி செய்திருக்கின்றது என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். அறநெறிக்குள்ளும் புகுந்து அரசியல் செய்ய வேண்டியிருக்கின்றது என்பது உணரப்பட்டிருக்கின்ற காலகட்டம் இது எனவும் அவர் கூறினார்.
வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தில், இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'இலங்கையின் அரசியலிலே சிங்கள கடும்போக்குவாத அரசியல் என்பது மற்றவர்களின் வெறுப்பின் மீது கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு உறுதியான சிங்கள பௌத்த தேசியவாதமாக வளர்ச்சியடைந்திருக்கின்ற காலகட்டம் இது. சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் வெளியிலிருந்து யாரையும் அழைப்பித்து வந்தாயினும், தேசிய ரீதியாகத்தானும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பழிவாங்குகின்ற அரசியல் உணர்;ச்சிகளிலும் உணர்வுகளிலும் கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு காலகட்டம் இது.
இந்த இரு விதமான போக்குகளும் இந்த நாட்டுக்கோ, சிங்கள பௌத்தர்களுக்கோ, சிங்களம் பேசுகின்ற கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, மலையகத்தவர்களுக்கோ, தமிழர்களுக்கோ ஒருபோதும் நன்மை தரப்போவதில்லை. இந்த நாட்டில் வாழ்கின்ற ஒருவருக்கும் இது ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை தரப்போவதில்லை.
எனவே, இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இன, மத பேதம் பாராது நாம் எல்லோரும் இப்பொழுதே நடவடிக்கையில் இறங்க வேண்டும். அடுத்த பரம்பரையை அழுக்கு அரசியல் சகதியில் விளையாட விட்டு ஆபத்துக்களில் தள்ளுகின்ற நிலைமையை நாம் தடுத்தாக வேண்டும்.
சரியான உத்தி, புதிய அரசியல் அணுகுமுறைகள், தேசிய நல்லிணக்கம் என்பவற்றை நோக்கிய முற்போக்கு சக்திகளை அணிதிரட்டிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.
இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்குவதற்கான தீர்ப்பு வெளிவந்ததன் பின்பு, சிறுபான்மை மக்களுக்கு நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கிற பலம் இருக்கிறதா அல்லது மீண்டும் சிங்களக் கடும்போக்குவாத தேசியவாதிகளிடம் அந்தப் பலம் சென்றுவிட்டதா என்று சிந்திக்கின்ற ஒரு காலமாக தற்போதைய காலகட்டம் உள்ளது.
சிறுபான்மை இனங்கள்தான் தீர்மானிப்பவர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த நிலைப்பாட்டிலும் மாற்றம் வரத் தொடங்கியிருக்கின்றது என்பது எனது அபிப்பிராயம்.
சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து சிங்களவர்களே ஆட்சியின் தலைவர்களாக இருந்திருந்திருக்கின்றார்கள். ஆரம்பத்தில் ஆட்சி செய்தவர்கள் அரைக் கிறிஸ்தவர்களாகவும் அரை பௌத்தர்களாகவும் இருந்தவர்கள்தான் ஆட்சி செய்யக் கிடைத்தது. இப்பொழுது அதற்கு வாய்ப்பில்லை. தனி பௌத்தர்களாக இருந்தால்தான் ஆட்சி செய்யமுடியும் என்பது சமகாலத்தில் ஏற்பட்டிருக்கின்ற நிர்ப்பந்தம்.
சகோதர உணர்வோடும் பாதுகாப்பு உணர்வோடும் வாழக்கூடிய சூழ்நிலையை பெரும்பான்மையினர் ஏற்படுத்தித் தரவேண்டும். இன்று மதங்களை அரசியலாக மாற்றியதன் விளைவாக யுத்த உணர்வுகளும் அராஜகமும் கோலோச்சுகின்றது. உலகில் பொருளாதாரத்தை சேர்க்க உதவுகின்ற முதலாவது துறை யுத்தம்தான்.
என்னுடைய நோக்கமெல்லாம் இந்த வானக்கூரைப் பந்தலின் கீழ் வாழ்கின்ற அனைத்து மக்களையும் நேசித்து அவர்களுக்கு என்னாலான சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதுதான். அன்றும் இன்றும் இனியும் எனது நோக்கம் அதுவாகத்தானிருக்கும்.
அதுவல்லாமல் நான் செய்த சேவைகளை படம்பிடித்துக் காட்டி வாக்கு வசூலிக்கின்ற வங்குரோத்து அரசியலை நான் ஒருபோதும் செய்தவனல்ல என்பதை நான் உள சுத்தியோடு எந்த சமூகத்துக்கு முன்னாலும் துணிந்து கூறுவேன். கடந்த 32 வருட காலம் சரியான புரிந்துணர்வு இல்லாமல் நடந்துகொண்டு விட்டோம்.
எனக்கு அரசியல்வாதி என்கின்ற பாத்திரத்தை இறைவன் தந்திருக்கின்றான். அதன் மூலம் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து துவேஷமில்லாமல் கடமையாற்ற எனக்கு அருளப்பட்ட சந்தர்ப்பம் இது. அந்தப் பாத்திரத்தை நான் கண்ணியமாகச் செய்கின்றேன். அதனால்தான், இந்து இளைஞர் மன்ற அறநெறி விழாவில் நான் அதிதியாக அழைக்கப்பட்டிருக்கின்றேன்.
சிறுபான்மை அரசியல் போக்கிலே ஒரு புதிய பார்வையும் மாற்றமும் வேண்டும். இந்த மாற்றமும் புதிய போக்கும் பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கின்ற போக்காக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொடுத்து எடுக்கின்ற போக்காக அது இருக்க வேண்டும். இது அரசியல் சாணக்கியத்தோடும் நுணுக்கத்தோடும் கைக்கொள்ளப்படவேண்டும்.' என்றார்.
Post a Comment