Header Ads



அரசாங்கம் ஒரு சில சர்வாதிகாரிகளினால் இயக்கப்படுகிறது - ரத்ன தேரர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அரசாங்கமும் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பார்ப்பதற்கு முன்னர் தரையில் இருக்கும் துளைகளை பார்க்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் வருடாந்த கூட்டத்தில் இன்று 19-10-2014  உரையாற்றிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம், ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகள் உட்பட சகல வற்றையும் உள்ளடக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே தேர்தலை நடத்த உள்ளார். இது நேரத்தை அடிப்படையாக கொண்டது அல்ல. ஜாதகத்தை அடிப்படையாக கொண்டது என ஜாதிக ஹெல உறுமய உணர்கிறது.

நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது உட்பட முக்கிய பிரச்சினைகளுக்கு தேர்தலுக்கு முன்னர் தீர்வுகாணப்பட வேண்டும்.

அதேவேளை நியாயமற்ற வகையில் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு அதிகளவான நிதி கிடைப்பதுடன் ஏனைய அமைச்சுக்கள் உரிய முறையில் செயற்படுவதில்லை.

அரசாங்கம் நாங்கள் கூறுவதை கேட்பதில்லை. அரசாங்கம் ஒரு சில சர்வாதிகாரிகளினால் இயக்கப்படுகிறது. பணத்தை சம்பாதிப்பது மாத்திரமே அவர்களின் நோக்கம்.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தினால், அவருக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளோம் என அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.