புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்பு - விமல் வீரவன்ச
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதற்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்பு இருப்பதாக ஆளும் கட்சி அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் லண்டனுக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இதன் போது தடை நீக்குவது குறித்து ஏதேனும் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடியும் என்ற ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை ரத்து செய்து அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது. எனினும், இந்த அழுத்தங்களுக்கு ஜனாதிபதியோ அரசாங்கமோ அடிபணியவில்லை. நாட்டின் ஆடைக் கைத்தொழில் துறைக்கு விதிக்கப்பட்ட தடையினால் நாடோ ஜனாபதியோ பாதிக்கப்படவில்லை. இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்படுத்தவே முயற்சிக்கப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் புலிகளை தூண்ட வேண்டும். புலிகளின் ஊடாக நாட்டில் தீ மூட்ட முயற்சிக்கப்படுகின்றது, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நோக்கத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஐரோப்பிய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியவுடன் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சக்திகளின் உள்நாட்டு கைப்பொம்மைகள் யார் என்பதனை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய அரசாங்கம் எந்த காரணத்திற்காகவும் இந்த சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment