வெல்லுகிற குதிரை எது என்பதை பிறகு பார்ப்போம் - ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை. அது தொடர்பில் நாம் கையாளக் கூடிய உபாயங்கள் உள்ளன. இத் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், அவசரப்படாமல் நன்கு கலந்தாலோசித்ததன் பின்னர் அநேகமாக இன்னும் ஒரு மாத காலத்துக்குள் எமது கட்சியின் நிலைப்பாடு குறித்து திட்டவட்டமாக கூறினார்.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் வியாழக் கிழமை (23) இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இரண்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
இன்று காலையில் கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் ஏற்பாட்டில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேசங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றியதன் பின்னர் மாநகர சபையில் ஏ.எல். அப்துல் மஜீத் பிரதி மேயராக உத்தியோகபூர்வமாக சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்ற நிகழ்வில் கூறியவற்றை அன்று மாலையில் சம்மாந்துறை நகர மண்டபத்தில் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 66ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்வொன்றில் மீண்டும் அமைச்சர் ஹக்கீம் உறுதிப்படுத்தி உரையாற்றினார்.
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச் செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
இப்பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் நெருக்கடியான ஒரு கட்டத்தில் முன்னொரு போதும் சந்தித்திராத பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கிறது. ஒரு கண்டத்தை தாண்ட வேண்டியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப் போகிறது என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொல்லாதவற்றையெல்லாம் சொன்னதாகச் சொல்லி மக்கள் மத்தியில் தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். நான் சில தினங்களுக்கு முன் புனித மக்காவுக்கு உம்றா கடமைக்காக சென்றிருந்ததைக் கூட அரசியல் மயப்படுத்தி சில பத்திரிகைகளும் இணையத்தளங்களும் விசமத்தனமான கருத்துக்களை பரப்பின. இறைவன் அனைத்தையும் அறிந்தவன். சதியில் ஈடுபட வேண்டிய எந்தத் தேவையும் எனக்கில்லை. ஆனால் எமது சமூகத்தின் நலன் குறித்ததாக நாம் மேற்கொள்ளப் போகும் தீர்மானம் அமைய வேண்டும். இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு பாதுகாப்பு கவசம் முஸ்லிம்களது இந்த தனித்துவமான அரசியல் இயக்கமாகும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
தேசிய அரசியல் பெருச்சாளிகளெல்லாம் வித்தியாசமான கோலங்களோடு வெளிக்கிளம்பும். மழை காலத்தில் புற்றீசல்கள் வெளிக்கிளம்புவதைப் போல படையெடுத்து வருகிறார்கள். அவ்வாறு வந்து எல்லாப் பழிகளையும் எங்கள் மீது சுமத்துவார்கள். ஆனால் இந்த இயக்கம் தியாகத்தினால் வளர்ந்தது. சவால்களுக்குப் பயப்பட்ட இயக்கம் அல்ல. ஆளும் கட்சியில் இன்று எங்களை விட யாரும் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. முஸ்லிம்களை பொறுத்தமட்டில் நாங்கள் தான் இன்று ஆளும் கட்சிக்குள் எதிர்கட்சியினர்.
இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு பல தடவைகள் அமைச்சரவையில் நான் முரண்பட்டிருக்கின்றேன். முஸ்லிம் காங்கிரஸ் என்பது தனக்கு மிகப் பெரிய தலையிடி என ஜனாதிபதி நினைத்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவருக்கு நான் செய்பவை அவருக்கு தலையிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்பவை அல்ல. அது நான் தலைமைத்துவம்; வழங்கும் இந்த இயக்கத்தின் தார்மீகப் பொறுப்பு. அவரை எதிர்ப்பதாக இருந்தாலும் அதனை தார்மீகப் பொறுப்பு என்று தான் நான் சொல்ல வேண்டும். அதையும் அவர் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இன்றுள்ள அரசியல் சூழல் மிகவும் வித்தியாசமானது. மறைந்த எமது தலைவர் அஷ்ரப் மறைந்த ஆர். பிரேமதாசாவை ஜனாதிபதியாக்கிவிட்டு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். பிரேமதாசாவை ஜனாதிபதியாக்கியர் எமது தலைவர் அஷ்ரப் என்பதை எந்த ஐக்கிய தேசியக் காரரும் மறுக்க முடியாது. பிரேமதாசவை ஜனாதிபதியாக்கிவிட்டு எமது தலைவர் அஷ்ரப் எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும் கூட அவரது நண்பராகவே இருந்தார். அஷ்ரப் அவர்கள் மேற்கொண்ட முடிவினால் தான் தாம் ஜனாதிபதியானதாக பிரேமதாச நன்றியோடு கூறிக்கொண்டார். ஆனால், எமது கட்சியைப் பாதுகாக்கும் விடயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் வேறு.
அன்று எதிர்க்கட்சியில் இருந்த எமது தலைவர் ஜனாதிபதி பிரேமாசாவின் நண்பராக இருந்தார். ஆனால் இன்று ஆளும் கட்சியிலிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த ஜனாதிபதியின் எதிரியாக பார்க்கப்படுகிறார். இதுதான் வித்தியாசம். ஏனென்றால், இவ்வாறான விசித்திரமான காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம். இதை ஜீரணிப்பது ஜனாதிபதிக்கும் கஷ்டமானது. எனக்கும் கஷ்டமானது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த அரசாங்கத்தில் அமைச்சர் ஒருவராக இருப்பதை மிகப்பெரிய தவறாக ஐக்கிய தேசியக் கட்சி பார்க்கின்றது. ஆனால், அமைச்சராக இருந்துகொண்டு அனுபவிக்கும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும். அதைவிட எதிர்க்கட்சியில் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.
1988 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவின் பின்புலம் தான் இந்தத் தேர்தலில் எடுக்கப் போகும் முடிவைத் தீர்மானிக்க வேண்டும.;. இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கம் இருக்கிறது. அன்று ஆறில் ஐந்து பெரும்பான்மையுள்ள அரசாங்கம் இருந்தது. அவ்வாறான அரசாங்கம் வருவது மிகவும் அபூர்வம். அது நாங்கள் கொடுக்காத ஆறில் ஐந்து. இது நாங்கள் கொடுத்த மூன்றில் இரண்டு. இந்த மூன்றில் இரண்டை வைத்துக்கொண்டு யாப்புத் திருத்தத்தினால் சமூக நலனுக்காக அல்ல, நாட்டு நலனுக்காகவது ஏதும் நடக்குமா? எங்களை முந்திக்கொண்டு ஜாதிக ஹெல உருமய வினர் ஒரு பெரிய பட்டியலை கையளித்திருக்கிறாகள். இவற்றை நிறைவேற்றினால் தான் உங்களுக்கு எங்கள் ஆதாரவு கிடைக்கும் என்று பகிரங்க அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள்.
ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருடனும் இன்னும் பேச்சுவார்த்தைக்கு போகவில்லை. எங்களுக்குள் நாங்கள் கலந்தாலோசனை (மஷூரா) செய்து கொண்டிருக்கிறோம். சரியான பாதையை கண்டு கொள்வதில் எங்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டு விடக் கூடாதென்பதில் மிகவும் அவதானமாக இருக்கிறோம். இந்த விடயம் நேர்மையாக கையாளப்பட வேண்டும். அவ்வாறாக நிலையில் நாம் வகுக்கும் வியூகம் எதுவாக இருந்தாலும், அது எங்களது கட்சியையும் சமூகத்தையும் பாதுகாக்கு;ம ஒரே நோக்கிலேயே இருக்க வேண்டும். ஒரு தனித்துவமான அரசியல் இயக்கம் என்பது திராணியோடும், முதுகெலும்போடும் இருக்க வேண்டும்.
ஒரு அபரிமிதமான யுத்த வெற்றியினால் இந்த அரசாங்கத்தின் ஆதரவு என்பது ஒரு வீக்கம் மாத்திரம் தான். அது வளர்ச்சியல்ல, வெறும் வீக்கம். அந்த வீக்கம் இப்பொழுது இறங்குகிறது. அந்த வீக்கத்தை வளர்ச்சியென அரசாங்கம் நினைத்தால் அது மகா தவறாகும். வெல்லுகின்ற குதிரைக்குத்தான் பந்தயம் கட்ட வேண்டுமென்று எங்கள் கட்சியில் சிலர் கதைக்கிறார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் உத்தேசம் இல்லை. அது ஓர் அபத்தமான விடயமாக பார்க்கப்படும். ஆனால், அது தொடர்பில் வேறு மாற்று வழிகளிலும் இருக்கலாம். ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் கூட்டாக ஒரு வேட்பாளரை நிறுத்தினால் என்ன என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். பொது வேட்பாளர் என்ற விடயமும் பேசப்படுகின்றது. ஆனால், எது, எப்படி நடக்குமென ஹேஷ்யம் கூற முடியாத நிலையில் பலரும் பலவற்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்குத் தேவை ஜனாதிபதித் தேர்தல் அல்ல. ஒரு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துங்கள். பாராளுமன்றத் தேர்தல் என்றால் தேர்தல் முடிந்த பிறகும் பேரம் பேசலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் முடிந்த பிறகு பேரம் பேச முடியாது. அதன்பிறகு எதுவும் எடுபடாது. தேர்தலுக்கு முன்பு தான் எதையும் பேசியாக வேண்டும். நாங்கள் ஆதரிப்பதற்கு முன்பு பேசுகிறோம். அதற்கு முன் வெல்லுகின்ற குதிரைக்கு பந்தயம் கட்டுங்கள் என்று சிலர் பதறிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் மேற்கொள்ளும் காரியமா? இந்த சமூகத்தின் நம்பிக்கைப் பொறுப்பை (அமானிதத்தை) அழிக்கின்ற காரியமல்லவா இது. வெல்லுகின்ற குதிரை என்றால் பேரம் பேசுவதற்கு என்ன இருக்கிறது. சும்மா வெறுமனே சோரம் போக வேண்டியது தான். இந்தக் கட்சியின் முழு நம்பிக்கைப் பொறுப்பும் (அமானிதம்) இன்றைய சூழ்நிலையில் பதினைந்து பேர்களின் கைளிலேயே உள்ளன. அரசியல் உச்ச பீடம் என்பது இருந்தாலும், முக்கிய அரசியல் அந்தஸ்துள்ள பதினைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் எட்டுப் பேர் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள். ஏனைய ஏழு பேர் எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்.
சென்ற வாரம் கொழும்பைச் சூழ எல்லா இடங்களிலும் எனது படத்தைப் போட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அரசாங்கத்தை கவிழ்க்க முஸ்லிம் காங்கிரஸ் சதி செய்கிறதாம். இதனை யார் செய்திருப்பார்கள்? அரசாங்கத் தரப்பு அல்லது எதிர்த் தரப்புதான் செய்திருக்க வேண்டும். எங்களைப் பயமுறுத்தி பணிய வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் சூடு கண்ட பூனைகள். முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான பயமுறுத்தல்களுக்கு அடிபணிகின்ற கட்சியல்ல.
நாங்கள் நிதானமாக, பக்குவமாக இந்த விடயத்தில் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்வோம். அதற்கு முண்டியடித்துக்கொள்ள தேவையில்லை. பேச்சுவார்த்தைகளுக்கு தலைவர் போக வேண்டும் என்றில்லை. முதலில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம். தலைமையை கடைசியில் பேசலாம்.
ஆனால், எங்களுக்கென்று ஒரு சரியான அணுகுமுறை இருக்க வேண்டும். வெல்லும் குதிரையில் பந்தயம் கட்டும் விளையாட்டு அல்ல. நாங்கள் பெட்டிக் கடை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் அல்ல. நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பயனில்லை. பிரதமராகவும் வாய்ப்புமில்லை. இருப்பதெல்லாம் பேரம் பேசலாம் என்ற ஒரு சந்தர்ப்பம். அதையும் நாசமாக்கும் வேலையைத் தான் வெல்லும் குதிரையில் பந்தயம் கட்ட எத்தனிப்பவர்கள் செய்கிறார்கள். அவர்கள் இப்பொழுது கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் அதனைத் தாராளமாகச் செய்யட்டும். ஆனால், கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சியினுடைய முடிவு சோரம் போன முடிவாக இருக்க முடியாது.
இயக்கம் அதனது பலத்தை பரீட்சிக்கின்ற காலம் இது இதை வெறும் பகடையாக பாவிப்பதற்கு யாருக்கும் முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த பலமான இயக்கத்தின் வீரியத்தையும் பிரயோக வலுவையும் யாருக்காகவும் வீணடிக்க முடியாது. எனவே மிக நிதானமாகவும், பக்குவமாகவும், நேர்மையாகவும் எமது முடிவை மேற்கொள்வதற்கு இன்னும் தாரளமாக காலம் இருக்கிறது.
இந்த நாட்டில் யுத்த வெற்றியின் மூலம் இராணுவத்தினருக்கு இருந்த தோல்வி மனப்பான்மையை ஜனாதிபதி விடுவித்தார் எனக் கூறப்படுகிறது. அதே போன்று இப்பொழுது 2010 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலில் இன்னும் ஒரு சாரார் தோல்வி மனப்பபான்மையில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் தான் ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்கள். அந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றியின் பிறகு இப்பொழுது உசாராகி ஓடித்திரிகிறார்கள். அதனால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஏனென்றால் பிரதான எதிர்க்கட்சிக்கு தோல்வி மனப்பான்மை தொடர்ந்திருந்தால் எல்லாமே நாசம். இனித்தான் ஒரு சரியான பந்தயம் நடக்கலாம். ஆனால், அதற்கு அவர்களும் அவசரப்படாமல் சில விடயங்களை சரி செய்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை எமது இயக்கத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்கான சரியான வழிவகைகள காண்பது தான் எங்களது தாரக மந்திரம். அதுபற்றி உரிய கவனம் செலுத்துவதற்கு சாதகமான களநிலவரம் உருவாகி வருகின்ற பொழுது அதனைச் சீர் குலைப்பதற்கும், எமது கட்சியின் அந்தஸ்தை அழிப்பதற்கும் சிலர் தலைப்பட்டிருக்கிறார்கள். எடுத்தெறிந்து வாக்குறுதிகளை அள்ளி வீசுவதோடு, இதற்கு மேலும் முஸ்லிம் காங்கிரஸ் தாமதிக்க கூடாதென்றும், உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸை அடிபணிய வைக்க யாராலும் முடியாது. இவ்வாறான கட்டத்தில் தான் நாம் பொறுமையோடு ஒரு பரந்துபட்ட மசூரா எனப்படும் கலந்தாலோசனையின் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறோம். முஸ்லிம் காங்கிரஸூக்குள் மட்டுமல்ல, எமது சமூகத்தின் சிவில் அமைப்புகளோடும், உலமாக்களோடும் நாங்கள் பேச வேண்டும். அது எங்களுக்குள்ள தார்மீகப் பொறுப்பு. அத்துடன் எல்லாக் கட்சிகளுடனும் பேச வேண்டும். வெல்லுகிற குதிரை எது என்பதை பிறகு பார்ப்போம் என்றார்.
வெல்லும் குதிரையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நாம் நமது பாதுகாப்பை இறைவனிடம் தான் எதிர் பார்க்க வேண்டும். இந்த நாட்டின் ஜனாதிபதியிடம் அல்ல. நிட்சயமாக முஸ்லிம்களின் வாக்கு ராஜபக்சவுக்கு கிடைக்கவே கிடைக்காது என்பதை தலைவர் அவர்கள் தயவு செய்து புரிந்து கொண்டால் சரி.
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தற்போது போக்கிடமற்றுக் கிடக்கிறார். மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் வெற்றி பெற்றால் எத்தனை தேசிய பட்டியல் பெறுவது எத்தனை அமைச்சர் பதவி பெறுவது. அம்பாறையில் UNP இல் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவிர ஏனைய முஸ்லிம்களைப் போட்டியிடாமல் செய்வது போன்ற ஒப்பந்தங்களைச் செய்வதற்கு சந்தர்ப்பம் எதிர்பர்த்துக்கொண்டிருக்கின்ரர். நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து போக வைப்புகள் குறைவாகவே உள்ளன. முஸ்லிம்கள் மகிந்த ராஜபக்சவை விரும்பவில்லை. UNP யுடன் இன்னும் பல அமைச்சர்கள் இணையும் வரை மதில்மேல் பூனையாக இருக்கின்றார். இவருக்கு புகலிடம் UNP தான்.
ReplyDelete