ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் திரிசங்கு நிலையில் - என்.எம். அமீன்
எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் திரிசங்கு நிலையில் காணப்படுவதாக முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் கவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் றிப்தி அலியின் அமெரிக்காவின் 30 நாட்கள் நூல் வெளியிட்டு விழா நேற்று சனிக்கிழமை 18 ஆம் திகதி நடைபெற்றபோது நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போது நாட்டில் அடிக்கடி ஊடகவியலாளர்கள் மாநாடுகள் நடைபெறுகிறது. இதில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான விடயங்கள் கூறப்படுகின்றன. இவற்றுக்கு சிங்கள மொழியிலோ அல்லது ஆங்கில மொழியிலோ பதில் கூறுவதற்கு நமது முஸ்லிம் சமூகத்தில் வெற்றிடம் நிலவுகிறது. இந்த வெற்றிடத்தை பலமான முஸ்லிம் சார்பு ஊடகமொன்றின் மூலமே நிவர்த்திக்கமுடியும்.
அதேவேளை நாடு தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் எம்மை எதிர்நோக்கியுள்ளது. இத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல் வாதிகளும் திரிசங்கு நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சமூகத்தை வழிநடாத்த வேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் அமைப்புக்களை சார்ந்துள்ளது. இதுதொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டல்கள் காத்திரமிக்கவையாக அமையப்பெறுதல் வேண்டும். இதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் வேறுபாடுகுளை ஒதுக்கிவிட்டு முன்வர வேண்டுமெனவும் என்.எம்.அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment