தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவார்களாயின்...?
பொதுபல சேனா அமைப்பும் மியான்மார் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான 989ம் இலங்கையில் இணைந்து செயற்படப் போவதாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து தேசிய சூறா சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
தேசிய சூறா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
பொதுபல சேனா அமைப்பு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டைத் தொடர்ந்து இந்த இரண்டு முஸ்லிம் விரோத தீவிர வாதக் குழுக்களும் ஒன்றிணைந்து விடுத்துள்ள இந்த அறிவிப்பு இந்நாட்டுக்கு நன்மையாக அமையாது.
மாறாக இது நாட்டைக் கட்டியெழுப்புவற்காகவும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காகவும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்குத் பெரும் தடையாக அமையும்.
இதேநேரம் இந்தியாவிலுள்ள முஸ்லிம் விரோத அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட இணக்கப்பாட்டுக்கு வரவிருப்பதாகவும் பொது பலசேனா அமைப்பு அறிவித்துள்ளது.
நாட்டின் இன, மத ரீதியிலான ஒற்றுமைக்கு ஏற்பட்டு வருகின்ற அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவை சர்வதேச சமூகத்தின் தலையீடுகளுக்கு மேலும் கதவுகளைத் திறந்து கொடுப்பதாக அமையும்.
அத்தோடு உலகலாவிய ரீதியிலான இலங்கையின் நற்பெயருக்கும் பௌத்த மதத்திற்கும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
இவை தொடர்பாகத் தேசிய சூறா சபை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது. ஆயினும் அவை குறித்து கவனம் செலுத்துவதை அரசாங்கம் தொடர்ந்தும் தவிர்த்துள்ளது.
இதற்கு முன்னர் இந்நாடு முகம் கொடுத்த இனப்பிரச்சினையால் இழப்புக்களையும் பாதிப்புக்களையும் தவிர வேறு எதனையும் இந்நாடு அடைந்து கொள்ளவில்லை.
இதேவேளை இப்புதிய கூட்டணியினர் பொய்யான அறிக்கைகளை விடுப்பதானது இன, மத ரீதியிலான முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கே வழிவகுக்கும். அம்முரண்பாடுகள் இந்நாடு ஏற்கனவே முகம் கொடுத்ததை விடவும் பயங்கரமானதாகவும் அதிக அழிவுகளைத் தரக் கூடியதாகவுமே இருக்கும்.
புனித அல் குர்ஆனுக்கும், முஸ்லிம் சிவில் சமூகத்திற்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் சேறுபுசுவதற்காக பொதுபல சேனா அமைப்பு பௌத்த மாநாடொன்றைப் பயன்படுத்தி இருப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாகும்.
சமூகத்தில் அங்கீகாரம் பெற்று இருக்கும் ஒழுங்குமுறையாக விளங்கும் தொடர்பாடலையும் கலந்துரையாடலையும் மேற்கொள்ளுவதற்கு பொதுபல சேனா தவறியுள்ளது.
இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தேசிய சூறா சபைக்கு எதுவிதப் பிரச்சினைகளுமே இல்லை. ஆனால் போலி காரணங்களை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரசாரங்கள் மூலம் இனவாத நோக்கங்களை அடைந்து கொள்ளுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து தேசிய சூறா சபை வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஆகவே இந்நாட்டின் மகாநாயக்க தேரர்கள், தீவிர மத வெறுப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் தேசிய சூறா சபை வேண்டுகோள் விடுக்கின்றது.
இந்நாட்டின் சிறுபான்மையினரை அடிமைப்படுத்தும் நோக்கில் சட்ட விரோத செயற்பாடுகளின் ஊடாக இவ்வருடம் ஜூன் மாதம் அளுத்கமவில் மேற்கொண்டது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இன்னும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது.
இதேநேரம் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மௌனம் சாதித்து வருவதைக் கைவிட்டு இவ்வாறான அழிவுகள் மற்றும் பாதிப்புக்களை கொண்டு வரக் கூடிய செயற்பாடுகளுக்கு எதிராகக் குறித்து குரல் கொடுப்பது அவசியமென தேசிய சூறா சபை கருதுகின்றது.
மேலும் சர்ச்சைக்குரிய அசின் விராது தேரரின் முஸ்லிம் விரோத இயக்கம் மியன்மார் நாட்டில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்துள்ளதுடன் அவர்களது வீடுகளையும், சொத்துக்களையும் அழித்துள்ளது.
அவரது முஸ்லிம் விரோத செயற்பாடுகள் காரணமாக அவருக்கு அந்நாட்டில் 25 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு 07 வருட சிறைத் தண்டனையை அவர் அனுபவித்துமுள்ளார்.
துவேஷத்தைத் தூண்டும் செயற்பாடுகள் அனைத்தும் பௌத்த மதத்திற்கு முரணானது. இவ்வாறான நிலையில், பொது பலசேனா அமைப்பின் கூட்டத்தில் பங்குபற்றவென சர்ச்சைக்குரிய அசின் விராது தேரர் இலங்கைக்கு வருவதற்கு விஸா வழங்குவதைத் தவிர்க்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலும், இதர உணர்வுபூர்வ மிக்க முஸ்லிம்களும் வேண்டுகோள் விடுத்தும் கூட அவை பொருட்படுத்தப்படாது சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புறக்கணிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் பொது பல சேனா அமைப்பின் கொழும்புக் கூட்டத்தில் பங்குபற்றிய பேச்சாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் அடிப்படையற்றதும் பொய்யானதுமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
பொது பல சேனா அமைப்பு கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கும் அச்சுறுத்தும் செயற்பாடுகளில் இவை பிரதானமானவையாவதுடன் அவையே அவர்களது மூலோபாயமுமாகும். அங்கு ஆற்றப்பட்ட உரைகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானவையாக அமைந்திருந்தன. அத்தோடு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பௌத்தர்களும் நாட்டின் ஏனைய மக்களும் குரோதம் கொள்ளுவதற்கும் அவை துணைபுரியக் கூடியவகையில் அமைந்திருந்தன.
பொது பல சேனா அமைப்பு விடுக்கின்ற அனேக அறிக்கைகளும் அவ்வமைப்பினரின் உரைகளும் துவேஷத் தன்மை கொண்டதும் மக்களை இன, மத மோதல்களில் ஈடுபடத் தூண்டிக் கூடியவையுமாகும். இருந்தும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துகின்ற நிறுவனங்கள் இவற்றுக்கு எதிராக உரிய வேளையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தொடர்ந்தும் தவறி வருகின்றன. இது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.
பொது பல சேனா அமைப்பின் கொழும்பு மாநாட்டில், அச்சிட்டபடி விநியோகிக்கப்பட்ட சில யோசனைகள் இந்நாட்டின் எதிர்கால அரசியலில் தீவிர இன மதவாதப் பிரிவினைகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அத்தோடு இந்த யோசனைகள் ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் அரசியல் கட்சி முறைமை ஆட்சிக்கு அச்சுறுத்தலாகும். இதற்கு எதிராக இந்நாட்டு அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது.
ஆகவே பொது பல சேனா அமைப்பும் அதனைப் போன்ற ஏனைய அமைப்புக்களும் முன்னெடுக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தீர்க்கமான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், முஸ்லிம் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் தேசிய சூறா சபை கேட்டுக் கொள்ளுகின்றது.
பொதுபல சேனா அமைப்பின் தீவிர வாதத்திற்கு எதிராக ஒரிரு அறிக்கைகளை விடுவதன் மூலம் அவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து நீங்கி விட முடியாது.
அதேநேரம் அரசாங்கத்தின் பங்காளர் என்றவகையில் இவ்விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எடுக்கத் தவறுவார்களாயின் அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு அவர்களும் பதிலளிக்கவே நேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment