இருண்டுபோன அந்த ஒக்டோபர்...!
(யாழ் ரமீசா)
உருகிப்போனோம்
உடைந்து போனோம்
விடிவைத்தேடி உறைந்து போனோம்
விதியே என முடங்கிப்போனோம்..!
சொத்திழந்தோம்
சொர்க்கமென வாழ்ந்த
சொந்தங்களை இழந்தோம்
சோகத்தை ஆடையாய் அணிந்து கொண்டோம்..!
நாங்கள் முத்திரை
குத்தப்பட்ட அகதிகள்..!
எதிர்காலம் தெரியாத
அபலைகள்..!
பட்டுப்போன எம் வாழ்வு
கண்கட்டி விட்டாற் போலானது..!
துரதிஷ்டம் எம்மை
விடாமல் துரத்தியது
துக்கம் தொண்டையில்
சிக்கி சீரழித்தது..!
இருண்டுபோன அந்த ஒக்டோபர்
வரட்சியை மீண்டும்
உமிழ்கிறது..!
சன்னங்களின் ஓசை
பயத்தை விதைக்கிறது!
ஆதாரமில்லை
சேதாரத்துடன்
வாழ்வாதாரம் துறந்து
தெருவோரம்
கூடாரமிட்டு கும்மிருட்டில்
கூட்டமாய் வாழ்ந்த கருமேகம்
சூழ்ந்த நாட்களை நினைவு நாளாய் நினைத்து மருகிப்போகிறோம்..!
குண்டுமழையில் நனைந்து
எம்மை விட்டுச்சென்ற
உறவுகளிற்காய்
பிராத்திக்கிறோம்..!
வாழ்ந்த நாட்களை
எண்ணிப்பார்க்கிறோம்..!
விடியலை தேடும்
இரவுகளாய்...!!
Post a Comment