கொழும்பில் உணவக ஊழியர்களுக்கு, விசேட அடையாள அட்டை
கொழும்பு நகரில் உள்ள உணவகங்களின் ஊழியர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை விநியோகிப்பதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
உணவக ஊழியர்கள் சுகாதார பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு உணவு விநியோகிக்கின்றனரா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவிக்கின்றார்.
அதனை அடுத்து அது தொடர்பில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்ட பின்னர் அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இதன் கீழ் சிறிய உணவகங்கள், சைவ உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன.
சோதனையின் போது உணவகங்களின் சமையல் அறை மற்றும் கழிவறை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், உணவு பாதுகாப்பு தொடர்பான உணவக ஊழியர்களின் அறிவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக டொக்டர் ருவன் விஜயமுனி குறிப்பிடுகின்றார்.
இதற்கான செயலமர்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவை அவர்கள் பெற்றுள்ளனரா என்பது தொடர்பில் ஆராயும் பரீட்சையொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் உணவக ஊழியர்களின் சுகாதார நிலை குறித்தும் கவனம் செலுத்தி, அதன் பின்னர் கொழும்பு மாநகர சபையின் சுகாதார திணைக்களத்தில் அவர்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக பிரதம வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டுகின்றார்.
எதிர்காலத்தில் இந்த அடையாள அட்டையை அணிவது கட்டாயமாக்கவுள்ளதாகவும் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment