Header Ads



கல்முனை கரையோர மாவட்டத்தை வலியுறுத்தி, மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை கரையோர மாவட்டக்  கோரிக்கையை வலியுறுத்தி கல்முனை மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மூன்று மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று மாலை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றபோது பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கையின் பின்னணி, அதன் வரலாறு மற்றும் அக்கோரிக்கையை வெற்றி கொள்வதன் அவசியம் குறித்து பிரதி முதல்வர் மஜீத் விலாவாரியாக எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது சூடான வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இப்பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது.

ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பிரேரணையை முழுமையாக ஆதரித்து உரையாற்றினர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஆகியோர் கரையோர மாவட்டம் அவசியம் என்கின்ற போதிலும் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் இப்பிரேரணை அரசியல் நோக்கத்துடன் சமர்ப்பிக்கப்படுவதால் தாம் இதனை எதிர்ப்பதாக குறிப்பிட்டனர்.

அதேவேளை முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கையை வென்றெடுப்பது தொடர்பில் எம்மால் ஒத்துழைத்து செயற்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நீண்டு சென்ற சூடான விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முதல்வர் நிசாம் காரியப்பர்; சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் சிந்தித்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து இப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது சபையில் பிரசன்னமாகியிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேரும் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நால்வரும் எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சி.எம்.முபீத் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எம்.எச்.நபார் ஆகியோர் பிரேரணை தொடர்பில் உரையாற்றிய போதிலும் வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நால்வரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் கருத்துக் கேட்ட போது; அவர்களின் இந்த செயற்பாடு தனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.