ஜனாதிபதித் தேர்தலும், முஸ்லிம் அரசியலும்
(I.L.M. றிபாஸ்)
ஜனாதிபதித் தேர்தல் வருமா வராதா என பல வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. ‘வரும் ஆனா வராது’ போன்ற நையாண்டிகளும் உலவுகின்றன, ஊவாமாகான சபைத் தேர்தல் முடிவுகள் எதிர்கட்சிகளுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது அதன் பெறுபேறாக அரசைவிட முழுவீச்சில் எதிர்கட்சிகள் தேர்தல் ஒன்றிக்கு தயாராகும் முஸ்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறெனினும் இலங்கை தேசத்தின் சகல தேர்தல்களும் மக்களின் அபிலாசைகளுக்காக அல்லாது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலாக மாறிவிட்டுள்ளது அத்துடன் தேர்தல் வெற்றி என்பது ஜனநாயக பெறுமானம் கொண்டதாக அல்லாமல் வெறும் கணிதக் கணிப்பீட்டின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சித்து விளையாட்டாகிப் போயுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே, அரசியல் மாற்றம் ஒன்றினூடாக தங்களது மனதை ஆக்கிரமித்துள்ள இனவாத கிலேசங்களிளிருந்து ஏதாவது ஆசுவாசம் கிடைக்கக் கூடுமா என்கின்ற நப்பாசையோடு முஸ்லிம் சமுகம் ஆசை வைத்துக் காத்திருக்கிறது, ஆனாலும் இது எவ்வாறு நிகழப் போகிறது நமக்காக இந்த அசகாயசூர செயலை யார் நிகழ்த்தித் தரப் போகின்றனர் என்ற கேள்விக்கு முஸ்லிம் சமுகத்தில் எந்த பதிலும் இல்லை.
இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை தேர்தலுக்கான அவகாசம் இருந்தும் அவசரமாக ஒரு தேர்தலை நடாத்தி தனது பதவிக் கதிரையை உறுதி செய்யும் அவசரத்தில் ஜனாதிபதி இருக்கிறார், இந்த தேர்தலுக்கான திகதி குறித்தலில் அரசியல் காரணங்களுக்கு அப்பால் சோதிடர்களின் பங்களிப்பும் ஆலோசனையும் எமது ஜனாதிபதியிடத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் இன்னுமொரு காரணியாகும். எனவே தேர்தலுக்கான அறிவுப்பும் அதற்கான திகதியும் ஒரு சுப வேளைக்காக தாமதிக்கப் படுகிறது. இன்னொரு புறம் பாப்பரசரை உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி அழைத்திருக்கும் இந்நிலையில் அவரது வருகைக்கான திகதி எதிர் வரும் ஜனவரி மாதத்தில் குறிக்கப் பட்டிருக்கிறது. வத்திக்கானின் விதிமுறைகளின்படி ஒரு நாட்டில் தேர்தல் நடைபெறும் போதோ அல்லது நடப்பதற்கு ஒரு மாத்தத்திற்கு முன்னரோ அல்லது தேர்தலின் பின்னரான ஒரு மாத கால அவகாசத்திலோ பாப்பரசர் அந்த நாட்டிற்கு வருகை தருவது தடை செய்யப் பட்டுள்ளது. எனவே தமது தனிப்பட்ட அழைப்பை பாப்பரசருக்கு விடுத்துள்ள ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தினை கருத்தில் கொண்டே தேர்தலுக்கான அறிவிப்ப விடுக்க வேண்டிய தேவையில் உள்ளார் .ஆயினும் இறுதிநேர மாற்றங்கள் எதிர் பார்க்க முடியாதவை அல்ல.
தேர்தலின் பேசுபொருளாக இலங்கைவாழ் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பல் வேறுபட்ட விடயங்களை முன்வைக்கும். செல்வாக்குள்ள தேசிய கட்சிகள் ஊழல்,பொருளாதார நெருக்கடி, குடும்ப ஆட்சியின் கொடுமைகள் என தமது பிரச்சாரத்தை முன்னெடுக்க, தமக்கான சுய நிர்ணய உரிமை, அரசியல் சுதந்திரம் என தமிழ் தரப்பு தமது கோரிக்கைகளை முன்னிறுத்தும். பெரும்பாலும் வடக்கின் தமிழ் வாக்குகள் ஒரு திசை நோக்கியே இருக்கும்; இதற்கான பங்களிப்பையும் தீர்மானத்தையும் தமிழர் விடுத்தலைக் கூட்டணி காத்திரமாக முன்னெடுக்கும். அதற்கான வரலாற்றுச் சான்றுகள் கடந்த வட மாகான சபைத் தேர்தலில் நம்மக்கு புரிய வைக்கப்பட்டது. கிழக்கிலும் கூட மிக செறிவான செல்வாக்கை தமிழர் விடுதலைக் கூட்டணி செய்தாலும், கிழக்கில் உள்ள தமிழ் தரப்பைச் சார்ந்த அரசின் நலன் விரும்பிகள் இவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை அரசின் ஆதரவோடு முழுவீச்சில் முன்னெடுக்க முயல்வர். ஆயினும் இதற்கான பெறுபேறுகள் குறிப்பிடத் தக்க அளவு எதிர்பார்க்க முடியாது என்பது கடந்த கால வரலாறு.
ஆனால் திரிசங்குநிலையில் அவஸ்தையுறப் போகும் சமுகம் முஸ்லிம் சமுகமாகவே இருக்கப் போகிறது, அதிர்ச்சியூட்டும் அளவிற்கு முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக வளர்ந்துள்ள இனவாதம், இதனை தடுத்து நிறுத்த எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்காத அரசு, அதற்கும் மேலாக இனவாதிகளுக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கும் பகிரங்கமாகவும் மறைவாகவும் துணை போகும் அரச இயந்திரம், என அரசின் மீது கடுப்புடன் இருக்கிறது முஸ்லிம் சமுகம். மறுபுறம் தமக்குள்ள பல கருத்து வேறுபாடுகளுடனும், முரண்பாடுகளுடனும் பலதரப்பாக சிதறுண்டு தமக்குள்ளேயே காலை வாரிவிடும் அரசியலை செய்தாலும் ஆளும் தரப்புக்கு முழுவதுமான ஆதரவு தருவதில் ஒற்றுமையோடு இதுகால வரை செயற்பட்டுவருகிறது முஸ்லிம் இனத்துவ அரசியல். கடந்த ஊவா மாகாண சபைத்தேர்தலில் அரசின் உத்தரவிற்கு அமைவாகவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் ஆகிய இருவரும் ஒற்றுமைக் கீதம் இசைத்தனர், அந்த கூட்டணி அரசு நடாத்திய அரசியல் காய் நகர்த்தலில் முஸ்லிம் தரப்பிலிருந்து ஒரு உறுப்பினரும் தெரிவாகமல் இருக்கக் கூடிய சூழலை அறிந்தோ அறியாமலோ நிறைவேற்றி எதிர் பார்க்கப்பட்ட தேர்தல் பெறுபேற்றை அரசுக்கு கனகட்சிதமாக பெற்றுக்கொடுத்து தமது எஜமான விசுவாசத்தை நிருபித்தத்து.
எதிர் வர இருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் வீராவேசமான கருத்துக்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்வைத்தாலும் நாம் புரிந்து கொள்ளமுடியாத ஏதோவொரு அரசியல் சானக்கியத்திற்காக அல்லது பெயரிடப்படாத பெரும்பான்மை முஸ்லிம் தரப்பின் கோரிக்கைக்கு அமைவாக அல்லது பெயர் குறிப்பிட முடியாத முக்கியமான உலமாக்களின் ஆலோசனைக்கு அமைவாக என எதோ ஒரு காரணத்திற்காக ஆளும் தரப்பிற்கே தமது ஆதரவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம் காங்கிரசுக்கு உருவாகும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து, இவ்வாறான ஒரு இக்கட்டான சூழலை முஸ்லிம் காங்கிரசுக்கு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் ஏற்படுத்துவார், அதற்கான முன்னோட்டத்தில் மிக கவனாமாக அவர் கடந்த காலங்களில் பிரச்சாரத்தினை முன்னேடுத்து வருவது கண்கூடு. இவரது தரப்பு வாதங்களை நியாயப்படுத்த முஸ்லிம் மக்களிடத்தில் பல பூச்சாண்டிக் கதைகளை எல்லாம் சொல்லி முஸ்லிம் சமுகத்தை பயங்காட்டி அரசியல் படம் ஓட்டிவருவதும் நமக்கு தெரியும். அமைச்சர் பஷீரின் அரசியல் வலைக்குள் விழாமல் வீரியத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முடிவெடுக்கும் பட்சத்தில் அமைச்சர் பஷீரின் தலைமையில் இன்னுமோர் காங்கிரஸ் முஸ்லிம்மக்களின் விடுதலைக்காக எனும் கோஷத்தோடு உதயமாகும் சாத்தியங்களும் தென்படுகின்றன, இத்தனை காங்கிரஸ்களும் பெற்றுத் தந்த்துள்ள முஸ்லிம் விடுதலை, கௌரவமான பிரஜை எண்ணும் அந்தஸ்துகள் ஏற்கனவே முஸ்லிம்களை நெஞ்சு நிமிர்த்திப் புல்லரிக்க வைத்துக் கொண்டிருப்பது வேறுகதை.
முஸ்லிம் காங்கிரஸ் புனர் நிர்மாணம், புத்துயிரளித்தல், புதுப் புனல் பாய்ச்சி முஸ்லிம் சமுகத்தின் விடுதலை மராத்தினை வேரூன்ற செய்தல் என்பன போன்ற விடயங்கள், மற்றும் உணர்ச்சியூட்டும் கோசங்கள் கட்சிக்குள் அற்புதங்களை நிகழ்த்தும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கட்சி ஒருபோதும் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்ததும் கிடையாது, அதை நிரூபிக்கும் வகையில் நடந்து கொண்டதும் கிடையாது, என்னதான் வியாக்கியானங்கள் பேசியபோதும் புதிய மொந்தையில் பழைய பானத்தையே நமக்கு குடிக்கத் தருவார்கள்.
மறுபுறம் அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் ரிசார்ட், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாகான சபை உறப்பினர்கள் என என்ன நிகழ்ந்தாலும் அரசுக்கே எம் ஆதரவு என மார் தட்டும் முஸ்லிம் அரசியல் முகங்கள் அபிவிருத்திக் கோஷங்களோடு களமிறங்கும். தற்போதைய ஜனாதிபதியே வெல்வார் என முஸ்லிம் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கும், முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதிக்கு கிடைக்காது அவர் வெல்லும் பட்சத்தில் எமது நிலை என்னவாகும் என பயம் காட்டும். தற்போதைய ஜனாதிபதி வெல்லும் பட்சத்திலேயே நமக்கான விடுதலை கிடைக்கும் என ஆசை காட்டும். கடந்த காலத்தை மறக்கச் சொல்லும். இந்த மூளைச் சலவைகளைத் தாண்டி எதிர்காலம் பற்றிய பிரக்னையோடும் சுயமாக சிந்தித்தும், கள நிலவரங்களை அலசி ஆராய்ந்தும் முடிவெடுக்கக் கூடிய முதிர்ச்சியும் அரசியல் ஞானமும் முஸ்லிம் சமுகத்திற்கு இன்னும் கைகூடவில்லை. இதனை முன்னின்று நடாத்திவைக்கும் சிவில் மற்றும் அரசியல் சக்திகளும் முஸ்லிம் சமூகத்துக்குள் இதுவரை வேரூன்றவில்லை.
வெவ்வேறு நாம கோஷங்களோடு பிரிந்து பட்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசுக்கு ஆதரவளித்தல் எனும் கோட்பாட்டில் ஏகோபித்த ஒருமைப்பாட்டோடு இது கால வரை செயற்பட்டு வருகின்றன, வெல்லும் வாய்ப்புள்ள கட்சியல் வாக்குக் கேட்டாலும் ஆட்சியிலுள்ளவர்களுடன் ஓட்டிக்கொள்வதில் மிக கவனமாக இருக்கின்றன. இதனால் நுனியில் இருந்து அடி வரை ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும் அரசியல் விற்பன்னர்கள் சமுகத்தின் சகல மட்டத்திலும் பரவிக் காணப் படுகின்றனர். தமது தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு தலைவர்களுக்கே விளங்காத வியாக்கியானங்களை, சமுகத்தின் அடிமட்டம் வரை கொண்டு சேர்க்கும் பணியினை மிக கட்சிதமாக இவர்கள் செய்வார்கள். எனவேதான் முஸ்லிம் அரசியலின் ஒரு தரப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர் தரப்பில் போய் அமரும் மனோதிடம் இன்னொருதரப்பிற்கு இருக்காது. இன்னொருபுறம் எதிர்கட்சி அரசியலை சமூகமட்டத்தில் கொண்டு சேர்க்கும் பணியினை செய்வதற்கு காத்திரமான பின்புலம் உள்ள முஸ்லிம் அரசியல் தரப்பு இன்னும் தயாராகவில்லை என்பதே யதார்த்தம்.
இவ்வாறான ஒரு சூழலில் மூன்றாம் தவணைக்கு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டி இடுவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக சட்டத்துறையினர் கோஷமிட்டாலும் எந்த சட்டமும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் மூன்றாம் முறையும் தான்தான் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பகிரங்கமாகவே அடித்துக் கூறுகிறார். இப்படியான சூழலில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் யாருடன் சேர்வதென்பது முஸ்லிம் சமூகத்தைக் குழப்பி விட்டுள்ளது. ஆயினும் கடந்த கால அனுபவங்களை மறந்து எதிர்கால நம்பிக்கையோடு புதிய அரசியல் வியூகம் வகுக்கும் திராணியோடு முஸ்லிம் சமுகம் ஒன்றுபடும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. இதனால் பெரும் வீச்சில் மாற்றத்திற்காக முஸ்லிம் சமுகம் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடாது சிதறியே வாக்களிக்கும் சாத்தியமுள்ளது. இனவாதக் கருத்துக்களால் தாம் பெரிதாக கவரப் படவில்லை என்பதை பெரும் பான்மை மக்கள் கடந்த ஊவா மாகான சபைத் தேர்தலில் தெளிவாக சொல்லியுள்ளனர் .எனவே சிங்கள வாக்குகளும் பெரும் வித்தியாசத்தில் அல்லாது சம அளவிலேயே பிரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவேதான் எந்த தரப்பு வாக்களிக்காமல் 2005 இல் மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெல்லச் செய்ததோ அதே தரப்புதான் இம்முறை வாக்களித்து தமது தீர்மானத்தை தீர்க்கமாக உலகறியச் செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
Post a Comment