Header Ads



ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்...!

(நவாஸ் சௌபி)

எதிர்வருகின்ற வருடத்தின் ஆரம்ப காலங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முடிவுகள் அரசினால் எட்டப்படும் நிலையில் இத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு எத்தகைய அவதானங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது இக்காலகட்டங்களில் முஸ்லிம்களின் அரசியலில் முக்கியமான ஒரு தீர்மானமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முஸ்லிம் சமூக அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற முடிவு, தேசிய அரசியலில் சிக்குண்டுள்ள முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை நிதானமான ஒரு நிலைக்கு கொண்டுவரும் நம்பிக்கையினை வெளிப்படையாகக் காட்டி நிற்க வேண்டும். மாறாக அது முஸ்லிம் சமூகத்தை மேலும் நசுக்குகின்ற ஒரு பொறிக்குள் தள்ளிவிடக் கூடாது என்பது முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்க வேண்டிய சமூகப் பற்றுடனான தர்மீகப் பொறுப்பாகும். 

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் நிலையில், ஏனைய பெரும்பான்மை எதிர்கட்சிகள் ஒரு பொதுவேட்பாளரைக் கொண்டுவருவதன் மூலமாக மஹிந்தவின் ஆட்சியை மாற்றியமைக்கலாம் என்ற தீர்வுகளை நோக்கி; தங்களது காய்நகர்த்தல்களை நகர்த்தும் அதேவேளை, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதாகவே அதன் நகர்வுகளை இதுவரை நகர்த்திவருகிறது. 

இதன்படி மஹிந்த, ரணில், பொதுவேட்பாளர் என்ற மூன்று முடிவுகளை நோக்கியே முஸ்லிம் காங்கிரஸ் தங்களது ஆதரவை வெளிப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்பது இப்போதுள்ள நிலைவரங்களின்படி தெளிவாகிறது. 

இத்தகைய மூன்று வேட்பாளர்களுள் முஸ்லிம் காங்கிரஸ் எந்தப்பக்கம் சாய்வது என்பதே நேரடியான கேள்வியாகும். அதற்கான நியாயங்களை ஆராய்வதிலுள்ள முக்கியவிடயங்களை நாம் நோக்கலாம். 

தற்போதுள்ள நிலையில் பொதுவேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்னும் உறுதியான பதில் காணப்படவில்லை. ஆயினும் சந்திரிக்கா மீதான அபிப்பிராயங்கள் மேலோங்கும் முடிவுகள் இருப்பதாகவும் தெரிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளை கணிசமாக பெறகக் கூடியவர் என்றவகையிலும் இதற்குமுன் தனது ஆட்சி மூலம் நல்லதொரு ஜனநாயகத்தை உருவாக்க முற்பட்டவர் என்றவகையிலும் மஹிந்தவை வெற்றிபெறுவதற்கு பொருத்தமானவராக சந்திரிக்கா இருப்பார் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அரசியல் உயர்தரப்பினர்களால் முன்வைக்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு முடிவு எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் என்றவகையில் எடுக்கப்பட்டு, சந்திரக்கா களமிறங்குவாராயின் முஸ்லிம் காங்கிரஸ் தனது பகிரங்கமான ஆதரவை அதற்கு வழங்குவதில் பெரிதாக எதையும் சிந்திக்க வேண்டிய தேவை இல்லை. அந்தப் பொது வேட்பாளர் அணிக்கு முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கலாம். அதில் தேசிய அரசியல் மாற்றத்தோடு முஸ்லிம் அரசியலிலும் நல்ல பலமாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

மாறாக பொதுவேட்பாளர் என்ற முடிவு எடுக்கப்படாமல் பிரதான வேட்பாளர்களாக மஹிந்தவும் ரணிலும் போட்டியிடும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தப்பகம் சாய்வது என்ற முடிவினை எடுப்பதில் அது எந்தப்பக்கமும் சாய்யாது மக்களின் சுந்திரத்திற்கு வாக்களிக்க விடுவதே தற்போதுள்ள நிலைவரங்களின்படி சாலச்சிறந்தத முடிவாகும் எனத் தென்படுகிறது.

சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மீது ஏவப்பட்டுள்ள பொளத்த போராட்டமுன்னெடுப்புகளால் மஹிந்த அரசை மனதளவில் வெறுக்கின்றவர்களாக முஸ்லிம் மக்கள் காணப்படுகின்றார்கள். இந்த வெறுப்புணர்வைக் கடந்த பல மாகாணசபைத் தேர்தல்களிலும் அவர்கள் தெளிவாக நிரூபித்துமிருக்கிறார்கள். இந்நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கி மக்களை மஹிந்தவுக்காகவாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வதற்கு எந்தவிதமான நியாயங்களும் இல்லை என்பதே மக்கள் அபிப்பிராயமாக இருக்கிறது. 

கடந்தமாகாணசபைத் தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் தங்களது பிரச்சாரங்களை முழுமையாக மஹிந்த அரசுக்கு எதிராகவே செய்து, கொதிக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுமிருந்தது. இவ்வாறான நிலையில் மஹிந்தவை ஆதரிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் முன் எப்படிச் சென்று நிற்பது? எதிரணியில் ரணில் போட்டியிடுவதால் மஹிந்தவின் வெற்றி உறுதியானது எனவே அவரது வெற்றிக்கு நாமும் பங்காளிகளாக இருப்போம் என்ற நியாயத்தைத் தவிர வேறு எந்த நியாயமும் மஹிந்தவை ஆதரிப்பதற்கு இப்போதில்லை. ஆனாலும் அவரது வெற்றி உறுதியானது எனத் தெரிந்து அவருக்கு ஆதரவளிப்பது முஸ்லிம்களை அழிப்பதற்கு நாமே ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதுபோலாகும். 18 வதுதிருத்தத்திற்கு ஆதரவளித்தது போன்ற ஒரு வரலாற்றுத் தவறாகவே இதுவும் அமையும்.

எனவே மஹிந்தவை ஆதரிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் முடிவினை எடுத்து அதன் மூலம் மஹிந்த வெற்றி அடைந்தாலும், அதில் முஸ்லிம் காங்கிரஸூம் முஸ்லிம் மக்களும் தோற்றுப் போவார்கள் என்பதே உண்மை. 

மாறாக மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் தீவிர வெறுப்புடன் இருக்கின்றார்கள் என்கின்ற காணரத்தையும் கொதிப்பான இச்சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரம சிங்காவை ஆதரிக்கும் முடிவினை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்துவிடலாம் என முஸ்லிம் காங்கிரஸ் ரணிலின் பக்கம் சாய்வதில் பலபின் விளைவுகள் இருப்பதனையும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம்களும் தமிழர்களும் ரணிலை நேரடியாக ஆதரிப்பதிலுள்ள மிகப் பெரும் ஆபத்தாக இருப்பது யாதெனில் அது அதிகப்படியான சிங்கள பௌத்த வாக்குகளை மஹிந்தவுக்குப் பெற்றுக் கொடுப்பதாகும். சம்பந்தனும் ஹக்கீமும் ரணிலுடன் சேர்ந்து நாட்டைத் துண்டாடப் பர்க்கிறார்கள், இந்த நாட்டினை சிங்கள மக்கள் பறிகொடுக்கும் நிலை ஏற்படப் போகிறது போன்ற இனவாhதப் பிரச்சாரங்களால் பெரும்பாலான சிங்கள வாக்குகளை மஹிந்தவுக்கு ஆதரவாக பெற்றுக்கொடுக்கும் நிலையை இது உருவாக்கும். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதுவே நடந்தது.

மாறாகத் தமிழ் முஸ்லிம் சமூகக் கட்சிகள் இம்முறை மஹிந்தவுக்கு எதிராக ரணிலுக்கு பகிரங்கத் தேர்தல் ஆதரவை வழங்காதுவிட்டால் இத்தகைய இனவாதப் பிரச்சாரங்களுக்கு இடமில்லாமல் போகும். அது ஒரு புறமிருக்க இன்றுள்ள நிலையில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு எதிராக எந்த வேட்பாளர் நின்றாலும் அவரை ஆதரித்தே தங்களது பெரும்பான்மையான வாக்குகளை அளிப்பார்கள் என்பது தெளிவான ஒன்றாகும். இந்நிலையில் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டாலும் அவருக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதாகவே அந்த முடிவு அமைவது நன்மையானதாகும். 

இதனால், மக்களின் வாக்குகளை நாங்கள்தான் பெற்றுத் தந்தோம் என்று உரிமைகோரி பேரம் பேசும் சக்தியை காட்சி இழந்துவிடும் என்று கருதினால், அந்த சந்தர்ப்பத்தை இத்தேர்தலில் நாம் இழப்பதும் எமக்கு நஷ்ட்டமில்லை கிழக்கு மாகாண ஆட்சிக்கு நாம் பேரம் பேசியதையே பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாங்கள் பேரம் பேசும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கின்ற நிலைமையை இன்னும் சீரழிக்காது இருப்பது சிறந்ததல்லவா?

மாத்திரமல்லாமல், எதிர்கட்சி வேட்பாளராக ரணில் இருக்கும் நிலையில் அவரது வெற்றி எந்தளவுக்கு உறுதியானது என்பதிலும் சந்தேகங்கள் எழுகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியிடத் தகுதியற்றவராக ஐக்கிய தேசிய கட்சி ரணிலை முத்திரை குத்திச் சாகடித்துவிட்டு, இத்தேர்தலில் மரணித்த ஒருவரை மீண்டும் உயிர்ப்பிப்பது போன்று ரணிலை நிறுத்தினால் அதன் பலம் எத்தகையது என்பதையும் நாங்கள் சிந்திக்க வேண்டும். 

முஸ்லிம்கள் முழுமையாக ஆதரவளிப்பதனால் மாத்திரம் ரணில் வெற்றிபெற முடியாது. எனவே வெற்றி உறுதியில்லாதவருடன் இணைந்து அவருடன் பேரம் பேசும் சக்தியை உருவாக்க நினைப்பதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த இடத்தில் பேரம் பேசும் சக்தி என்பதும் ஒரு போலியான பிரச்சாரமாகவே பார்க்கப்படும். 

அடுத்து, ரணிலுக்கு ஆதரவளித்து எதிர்பாராதவிதமாக அவர் தோற்றுப்போனால்,மஹிந்தவின் இந்த ஆட்சியிலும் நாங்கள் இரண்டும் கெட்ட நிலைக்குத் தள்ளப்படுவோம். இறுதியில் கட்சியையும் கட்சியிலிருப்பவர்களையும் காப்பாற்றுவதற்கு வேறு வழியில்லாமல் அரசுடன் இணைய வேண்டிய கட்டயாம் ஏற்பட்ட கதையை ஹக்கீம் மேடைகளில் எதிர்வருகின்ற காலங்களிலும்  சொல்லிக்கொள்ளும் துர்பாக்கிய நிலை ஏற்படும்.

ஆகவேதான் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவும் ரணிலும் ஜனாதிபதி வேட்பாளர்களானால் இவர்கள் இருவரையும் பகிரங்கமாக ஆதரிப்பதில் முஸ்லிம் காங்கிரஸூக்கு சங்கடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இரண்டில் ஒருபக்கம் சாய்ந்தாக வேண்டும் என்ற வழக்கமான சிந்தனையிலிருந்து விலகி எந்தப் பக்கமும் இல்லாத ஒரு நிலையை சமூக அரசியலுக்காக எடுத்து மக்களின் முன் தங்களின் உரிமைத்துவ அரசியலை நிலைநாட்டுவதே முஸ்லிம் காங்கிரஸூக்குள்ள பொருத்தமான தெரிவாகும். 


No comments

Powered by Blogger.