முஸ்லிம்கள் தமது அரசியல் 'பேரம் பேசும் சக்தியை' இழந்து விட்டனரா..?
(எஸ்.எல்.எம்.பளீல்)
' கட்சியா....குடும்பமா? இவை இரண்டிலும் எதை தெரிவுசெய்வீர்கள் என்று எவராவது என்னிடம் கேட்டால் நான் எனது குடும்பத்தை விட்டு கட்சியையே தெரிவு செய்வேன். மாறாக, எனது கட்சி... எமது சமுதாயம்?...இரண்டிலும் தேர்வினைச் செய்யுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் சமுதாயத்தையே முன்னிலையில் தேர்வு செய்வேன்' ........... என தலைவர் அஷ்ரஃப் அவர்கள் ஒருமுறை போராளிகள் மத்தியில் பேசுகின்றபோது கூறினார். விலாசமற்று சிதறிக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்தை ஒன்று திரட்டி ஒற்றுமையின் ஊடாக ஒரு பலமிக்க சமுதாய தளத்தை அவர் கட்டியெழுப்பினார்;. அதன் மூலம் சமுதாயத்தின் பேரம்பேசும் சக்தியை கூட்டி இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாற்றினார். இதன் மூலம் முஸ்லிம் சமுதாயம் உரிமைகள் பெற்று தன்மானத்துடன் தலைநிமிர்ந்து இந்நாட்டில் வாழலாம் என்று கூறி அதனை சாதித்துக் காட்டினார். இந்நாட்டு அரசியல் வரலாற்றில் அவர் ஏற்படுத்திய 'புரட்சிகர புதிய அரசியற் கலாச்சாரம்'; ஒரு தசாப்த காலத்தில் பல சமுதாய சாதனைகளை புரியவைத்தது. தலைவர் அஷ்ரஃப் இந்த மாபெரும் விருட்சமான சி.ல.மு காங்கிரஸ் எனும்கட்சியை வைத்துத்தான் அத்தனையும் செய்தார். அக்கட்சியை உருவாக்கியதோடு புனிதகுர்ஆன், ஹதீஸ்அடிப்படையிலான கட்சியாப்பு, கட்சிப்பாடல்கள், கட்சிக்கொடி, கட்சித்தலைமையகம் தாருஸ்ஸலாம், கட்சியின் ஒழுக்கநெறிக் கோவை என்று அத்தனை அடிப்படைகளையும் கொண்ட கட்சியைத்தான் அவர் எம்மிடம் ஒப்படைத்தார்.
உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்றால் என்ன?, உரிமையுடன் கூடிய தொழில் வாய்ப்புக்களில் ஏனைய சமூகங்களோடு போராடி எவ்வாறு எமக்குரிய பங்கினைப் பெறுவது? என்றெல்லாம் அத்தனைக்கும் வழிகாட்டி விட்டுத்தான்; தலைவர் அஷ்ரஃப் இச்சமுதாயப் போராட்டத்திலே எம்மை விட்டும் பிரிந்தார்.எமது சமுதாயத்தின் ஒற்றுமை, அதன் வாக்குப்பலம் அதனால் பெறப்பட்ட மக்களின் அமானிதமான ஆணையை வைத்துத்தான் அவர் 1994- 2000ம் ஆண்டு வரையும் ஒரேயொரு ஆசனத்தினால் சந்திரிகா அரசாங்கத்தை விழவிடாது தக்கவைத்து இச்சமுதாயத்தின் பேரம்பேசும் சக்தியினை அதிகரித்து ஒலுவில் துறைமுகம், தெ.கி.பல்கலைக்கழகம், பாரிய நீர்வழங்கல் திட்டம் என அரசு மூலம் செய்து காட்டி அபிவிருத்திக்கு இலக்கணம் வகுத்தளித்தார். அத்தனையும் ஏற்படுத்தி இலங்கை முஸ்லிம்களை பேரம்பேசும் சக்தியுடன் கூடிய, தலைநிமிர்ந்து வாழக்கூடிய, பெறுமதிமிக்க சமூகமாக அவர் மாற்றியமைத்தார். அத்துடன் தேசிய அடிப்படையில் இந்நாட்டு பல்லின சமுதாயங்களிடையே சகவாழ்வு, நீடித்தசமாதானம் நிலவவேண்டுமென்ற உயர்ந்த நோக்கோடுதான் தேசிய ஜக்கிய முன்னணி (நுஆ)யை உருவாக்கி
(2)
இனங்களுக்கிடையான உறவுப்பாலமாக அமைத்தார். ஆகஸ்ட் 2000ம் ஆண்டில் அரசசார்பில் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் திருத்த யோசனைகளை துணிச்சலோடு சமர்ப்பித்து மூன்று மணிநேரம் அவர் ஆற்றிய மும்மொழியுரை அரசியல் வரலாற்றில் சாதனையாக கணிக்கப்படுகின்றது.
சமகால அரசியலிலே இந்நாட்டு முஸ்லிம்களின் இன்றைய அரசியல் அந்தஸ்து என்ன?.... இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பேரம் பேசும் சக்தி எங்கே?....தலைவர் அஷ்ரஃப்பின் மறைவிற்குப்பின்னால் கடந்த 14 வருடங்களில் நாம் சாதித்தவை எவை? மாறாக, சமுதாயம் என்று வரும்போது நாடாளுமன்றத்திலே மூன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளும், 4 கபினட் அமைச்சர்களும், 3உதவி அமைச்சர்களும், 15க்குமேற்பட்ட எம்பிக்களும் முஸ்லிம் பெயர்கொண்டு அலங்கரிக்கின்றனர்.மாகாண உள்ளுராட்சி மட்டத்திலே அரசியல் அதிகாரம் கொண்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலே......ஆனால் சமுதாயமோ தேடுவாரற்ற, அநாதரவான நிலையிலுள்ளது. அதன் பரிதாபகரமான நிலையோ வெளிப்படையாக மேலோங்கி நிற்கின்றது. தீவிர பொது பலசேனாவின் அச்சுறுத்தல், அட்டகாசங்களின் முன்னால் எமது சமுதாயத்தின் அல்லல்கள், அவலங்களைப் பற்றி ஜனாதிபதியுடன் பேசவேண்டுமென முஸ்லிம் எம்பிக்கள் எல்லோரும் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்திற்கு இன்றுவரை என்ன நடந்தது? இது ஒன்று போதுமே எமது கையாலாகாத தனத்தை எடுத்தியம்ப. இந்த அநாதரவான அவலநிலைக்கு யார் காரணம்? ஏன் எமது சமுதாயத்திற்கு இப்பரிதாபகர நிலை?.....
தலைவர் அஷ்ரஃப்பின் மறைவையடுத்து அவரின் 'பாசறை லேபலைப்' பயன்படுத்தி நாமும் தலைவராகவேண்டும் என்று தனிக்கட்சியமைத்து பிரிந்து சென்றவர்களைப்பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சமுதாய அவலத்தின் முன்னால் வேறு கட்சியமைத்த தலைவர்கள் கொளுத்திருக்கின்றார்கள், சமுதாயத்தை விற்று அச்செலவில் அபிவிருத்தி அரசியல் செய்கின்றார்கள். அவர்கள் வளரட்டும்.அல்லாஹ்விடம் பதில் சொல்லட்டும். ஆனால் தலைவர் அஷ்ரஃப்பின் பின்னால் அமானிதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுப்பேற்றுக் கொண்டவர்களின் நிலைபற்றியே சமுதாயம் கரிசனையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? அந்நிய சமுதாயங்களினால் எமது பர்தா உடையணிந்த பெண்கள், பள்ளிவாயல்களைப் பார்த்து ஜயோ பாவம்! என்று சொல்லும் நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்கள். 2012ல் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலோடு ஆரம்பித்த கிழக்கு மாகாண சபைத்தேர்தல், 2013, 2014களில் பொதுபலசேனாவின் பர்தா அச்சுறுத்தல், ஹலால் சான்றிதழ், குர்பான் புறக்கணிப்பு களின் மத்தியில் இடம்பெற்ற வடமேல், தென்மாகாண தேர்தல்கள் அத்தனையிலும் எமது சமுதாயத்தின் ஆணையினை அரசுக்கு தாரை
(3)
வார்த்தவர்கள் நாங்கள். இறுதியாக இரவோடிரவாக தீக்கிரையாக்கப்பட்டு 500 கோடிக்கு மேல் சாம்பலான 'தர்காடவுன்'; அனர்த்தத்தை தொடர்ந்து நடைபெற்ற ஊவா தேர்தலில் மக்கள் தமது தெளிவான தீர்ப்பினை வெளியிட்டிருக்
க்pன்றார்கள். நாம் விழித்தெழுந்து விட்டோம், இனியும் உங்களிடம் ஏமாந்து போகமாட்டோம் என்று அறுதியிட்டு கூறியிருக்கின்றார்கள்.இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன? ஏன் பதுங்குகின்றீர்கள்?......இந்த சமுதாயத்தின் அவலமான இந்த 'சக்றாத்' வேளையிலும் உதவி அமைச்சர் பதவி ஆசையாம்?..... கோடி ரூபாக்களுக்கு மாகாணப் பதவிகளையும் தாரை வார்க்க திரைமறைவில் பேச்சாம்?......பழைய அடிப்படைப் போராளிகளை காலில் மிதித்து, எடுத்த எடுப்பிலேயே மகுடங்களைச்சூட்டி கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட, பாய்ச்சப்பட்ட புதிய இரத்தங்கள் புரியப்போகும் சாதனைகள்தான் அவைகள்...... சமுதாயம் பொறுக்குமா?.... மன்னிக்குமா உங்களை?.....
இதற்கிடையில் மறுபுறத்தில் செயலாளர் நாயகத்தின் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளினால் சமுதாயம் குழம்பிப் போயிருக்கின்றது. 'முஸ்லிம்கள் அரசின்மீதான தமது வெறுப்பினைக் காட்டியிருக்கின்றார்கள்' என ஊவா தேர்தலைத் தொடர்ந்து அறிக்கையிட்ட செயலாளர், பின்பு மூன்றாவது முறையும் ஜனாதிபதி போட்டியிடுவதைப்பற்றி எமக்குஆட்சேபனையில்லை, ஆதரவளிப்போம் எனக்கூறியது விசனத்தை அளிப்பதாயுள்ளது. 'அரசு எம்மை ஏமாற்றிவிட்டது, வாக்குறுதிகள் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை'. கரையோர மாவட்டம், டிடிசி சேர்மன் பதவி, தனி அலகு, காணிப்பிரச்சினைகள், நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புகளில் எமது பங்குகள் என்று எதையும் அரசு தரவில்லை. என்ற உங்களது அறிக்கைகள் வாக்களித்த சமுதாய மக்களைச் சோர்வடையச் செய்திருக்கின்றன. அரசுக்கான 2ஃ3 ஆதரவு, 18வது திருத்தத்திற்கான ஆதரவு, கிழக்கு மாகாண சபைக்கான ஆதரவு, திவிநெகும சட்டத்திற்கான ஆதரவு என்று எந்த அடிப்படையில் சமுதாயத்தின் அமானிதங்களை நீங்கள் தாரை வார்த்தீர்கள்.......? சமுதாயச்செலவில் நீங்கள் தனிப்பட அடைந்த நன்மைகளும் சமதாயத்திற்கு விளங்காதவையல்ல. கட்சியின் தலைமை அந்தஸ்தில் இருக்கும் நீங்களே செய்யவேண்டிய அத்தனையையும் செய்துவிட்டு, கைசேதப்பட்டு சோர்வடைந்து அறிக்கை விட்டால் வாக்களித்து ஆணை தந்த சமுதாயம் யாரைத்தான் நம்புவது? யாரிடம் கேட்பது? உங்களது பேச்சுக்கள், எம் ஓயு க்கள், அரசிடமிருந்து எழுத்துமூல உத்தரவாதங்களைப் பெற்றிருக்கின்றோம் என நீங்களே உயர்பீட கூட்டத்த்pல் பகிரங்கமாக அறிவித்தவற்றுக் கெல்லாம் என்ன நடந்தது?.....
(4)
ஆகவே அபிவிருத்தியுமில்லாமல், உரிமைகளையுமிழந்து அநாதரவாக அத்தனையுமிழந்து நிற்கும் சமுதாயத்தினை காப்பாற்றவேண்டியது எமது தலையாய கடமை என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். வரப்போகும்
இவ்வரிய சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்த எமது அத்தனைவளங்களையும் பிரயோகித்து சரியான தீர்மானத்திற்கு கட்சி உடன் வரவேண்டும். தனிப்பட்ட அற்ப சலுகைகளுக்காக நீங்கள் சமுதாயத்தை காட்டிக்கொடுத்து தொடர்ந்தும் ஏமாற்றக்கூடாது. தலைவர் அஷ்ரஃப்பினால் வழங்கப்பட்ட இச்சமுதாய அமானிதத்தை பாதுகாக்கவேண்டியது யாருடைய பொறுப்பு? இப்பேரியக்கத்தின் சக்தியினால் இந்நாட்டிலே முஸ்லிம்களை உரிமைகளுடன் தலைநிமிர்ந்து, அச்சமின்றி வாழவைக்க உங்களால் முடியாது போனால் இந்த அமானிதத்தை மீண்டும் சமுதாயத்திடம் ஒப்படைப்பதை விட வேறு நற்கைங்கரியம் உங்களுக்கு இருக்கமுடியாது.
'நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச் சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக் காட்டினோம். அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்தும் அவை விலகிக் கொண்டன. இன்னும் அ(தைச் சுமப்ப) திலிருந்து அவை பயந்தன.(ஆனால்) மனிதனோ அதனைச் சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக் காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்'. ( அல்-அஹ்ஜாப் 33—வசனம் 72)
Post a Comment