முஸ்லீம்களை இணைத்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் - தமிழரசுக் கட்சி செயலாளர்
எமது தாயகத்தை பாதுகாக்கின்ற தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கு கிழக்கு மாகாண மக்கள் , மலையக மக்களையும் முஸ்லீம் மக்களையும் இணைத்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கின்றோம் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சிற்றம்பலம் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராமங்கள் ரீதியில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான யாழ். மாவட்ட மாநாடு இன்று இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
1961 ஆம் ஆண்டு சாத்வீக போராட்டம் ஆரம்பித்தது. இந்தப் போராட்டம் தெற்கு வரை எடுத்துச் செல்லப்பட்டதனால் அங்கிருந்த தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டு தாயகம் நோக்கி அனுப்பப்பட்டனர்.
ஆனால் இங்கு இருந்த தமிழர்களது இருப்பிற்கு எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இன்று எமது பிரதேசத்திலேயே நாங்கள் அனாதைகளாக அகதி முகாம்களில் வாழும் நிலை காணப்படுகின்றது.
இதுமட்டுமன்றி எமது பிரதேசத்தில் பல்வகையான ஆக்கிரமிப்புக்களும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் எதிர்காலத்தில் தாயகத்தில் நாம் கௌரவத்துடன் வாழ முடியுமா?
பலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட நிலை தான் எங்கள் நாட்டிலும் ஏற்படுமோ என்று நினைக்க வைக்கின்றது. தாயகம் பற்றி சிந்தித்த போது 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவாக்கிய போது இருந்த நிலைவேறு இன்றைய நிலை வேறு.
1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானம் ஏற்படுத்தப்பட்ட போது கிழக்கு மாகாணத்தில் எங்களது சனத்தொகை 50 வீதம். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது 44வீதம். இன்று கிழக்கு மாகாணத்தில் 34 வீதம் தமிழர்கள்.
எனினும் இதைவிடவும் குறையக் கூடிய வாய்ப்பு உள்ளது. இது தான் கள நிலை. இந்தக் களநிலையில் தமிழர்களது முக்கியத்துவம் குறைந்து போவது மட்டும் அன்றி இஸ்லீமியர்கள் ஒரு கட்சியாக கிழக்கு மாகாணத்தில் உருவெடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயாகத்திற்கு அவர்கள் எவ்வாறு தங்களுடைய அனுசரணையினை வழங்குவார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது. கடந்த காலங்களில் அவர்களது செயற்பாடுகள் தேர்தலில் அவர்கள் நடந்து கொண்ட விதங்கள் அரசுக்கு ஆதரவாகவே இருந்தது.
இந்த வடக்கு கிழக்கு இணைப்பில் அவர்கள் பெரும் சக்தியாக தான் இருக்கப் போகின்றார்கள்.அவ்வாறு இணைப்பு ஏற்படுத்தினாலும் அது வாக்கெடுப்பில் தான் முடியும். அவ்வாறு தமிழர்கள் வீதம் குறைவடைந்த நிலையில் எவ்வாறு எமக்கு சாதகமாய் அமையும் இது சிந்திக்கப்பட வேண்டும்.
எனினும் இந்த நிலை தொடர்ந்தால் எமது தாயகம் சூறையாடப்பட்டு பலஸ்தீனர்களுக்கு நடந்த நிலை எங்களுக்கு ஏற்படுமா என்று சிந்திக்கும் காலம் இது.
எனினும் வடக்கு கிழக்கு இணைப்பினைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையில் ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கின்றது. இவர்கள் இந்த இணைப்பின் மூலம் தனிநாடு கேட்கின்றனர் என்றே சிங்கள மக்கள் நினைக்கின்றனர்.
ஆகவே இந்த அதிகார பகிர்வு என்பது வடக்கு கிழக்கிற்கு மட்டுமல்ல இலங்கை முழுவதற்குமான அதிகார பகிர்வு திட்டத்தையே நாங்கள் முன் வைக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அடுத்து 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது மலையக தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. அவர்கள் இன்று தென்னிலங்கையில் பரவலாக காணப்படுகின்றனர்.
அவர்களது நிலை பற்றி என்ன? அவர்களது நியாயங்களை விடுத்து வடக்கு கிழக்கிற்கு தான் தீர்வு என கூறுவது நியாயமா? அவர்கள் சலுகை அரசியலுக்காக அவர்களது கொள்கைகளை இன அடையாளங்களை அழித்துக் கொண்டு செல்கின்றனர்.
ஆனால் எங்களுக்கு தார்மீக பொறுப்பு இருக்கின்றது. அவர்களை இணைத்து தான் தீர்வைப் பெற வேண்டிய நிலை உண்டு. எனவே இந்தக் கால கட்டத்தில் எங்களுடைய தாயகத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு தீர்வுத்திட்டத்தையும் அதை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லாம் என்றும் மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்களையும் பேச்சுவார்த்தை மூலம் இணைக்கலாம் என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே மேற்கூறப்பட்ட மூன்று பகுதியினரும் இணைந்தால் தான் ஒரு தீர்வுத் திட்டத்தை வைக்க முடியும். பல தடவை அரசுடன் பேசியும் எதுவும் கிடைக்கவில்லை.
இவ்வாறு போனால் வடக்கு கிழக்கில் இருக்கின்ற எமது தாயக கோட்பாட்டினை அரசு சிதைத்து விடும். இவ்வாறு ஏற்பட்டால் உரிமைப் போராட்டத்தின் சிந்தனை கூட வராது என்று தான் கூற வேண்டும்.
எனவே நாம் தீர்வு திட்டத்திற்கு வலுவான ஒரு செயற்பாட்டினை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment