Header Ads



60 இலட்சம் வாக்குகளுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் படையணி இன்று ஆரம்பிக்கப்படுகிறது

ஐக்கிய தேசிய கட்சியினால் 4 இலட்சத்து 25 ஆயிரம் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களை கொண்ட தேர்தல் படையணியொன்று இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கமைய ஐ.தே.க. வின் நாடளாவிய ரீதியிலுள்ள 12000 வாக்களிப்பு நிலைய அமைப்பாளர் இன்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ஒன்று கூடவுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தகவலளிக்கையில்

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்கள் மாநாடு இன்று 3 மணிக்கு கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இம் மாநாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பங்கு பற்றவுள்ளனர்.

இதன் போது நாடளாவிய ரீதியிலுள்ள 12000 வாக்களிப்பு நிலையங்களில் 34 பேரைக்கொண்ட தேர்தல் செயற்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கமைய தேர்தல் செயற்குழுக்கள் 12000 ஸ்தாபிக்கப்படவுள்ளது. இக் குழுக்களினூடாக ஐ.தே.க. விற்கு ஜனாதிபதி தேர்தலில் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வதனை இலக்காகக் கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இக்குழுக்களை கண்காணிப்பவர்களாக  பாராளுமன்ற மாகாண சபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளனர்.

குறித்த 12000குழுக்களினூடாக 4 இலட்சத்து 25 ஆயிரம் பேரை கொண்ட தேர்தல் படையணியை கொண்டு ஐ.தே.க. செயற்படவுள்ளது. இதனூடாக கட்சியின் இலக்கை இலகுவில் அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள மாநாட்டிற்கு 2 மணிக்கு முன்பு வருகை தருமாறு கட்சி பொது செயலாளர் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களிடம் வேண்டினார்.

குறித்த மாநாடு இன்று 5.30 மணிக்கு நிறைவடையவுள்ளது.

No comments

Powered by Blogger.