Header Ads



ISIS க்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம், பெரும் முதலாளிகள் மகிழ்ச்சி

(Kalaiyarasan Tha)

ஈராக், சிரியாவில் ISIS இயக்கத்தை அழிப்பதற்கான திட்டத்தை ஒபாமா அறிவித்துள்ளார். ஒபாமாவின் "ISIS அழிப்புப் போர்", அமெரிக்க பொருளாதாரத்திற்கு உதவும் என்பதால், பெரும் முதலாளிகள், குறிப்பாக எண்ணை வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், கடந்த ஒரு வருடமாக எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பரல் ஒன்று $115 க்கு விற்ற எண்ணை, தற்போது நூறு டாலருக்கு கீழே இறங்கி உள்ளது. 

ஐரோப்பிய தரத்திலான Brent $99,90; அமெரிக்க தரத்திலான WTI $92,30 என, இறுதியாக கிடைத்த பங்குச்சந்தை நிலவரம் கூறுகின்றது. எண்ணையை வாங்கி விற்கும் வர்த்தகர்கள் இதனால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். எண்ணை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளன. எண்ணை வர்த்தகர்கள், உள்நாட்டுப் போருக்குப் பிந்திய லிபிய எண்ணையை வாங்கி வைத்திருந்தனர். உலகின் எண்ணை நுகர்வாளர்களின் கேள்விக்கு அதிகமாகவே வாங்கி களஞ்சியப் படுத்தப் பட்டிருந்தது. எண்ணை விலை இறங்குவதற்கு அது ஒரு காரணம்.

அண்மைக் காலமாக, எண்ணை வர்த்தகம் பெரிதும் சீனாவில் தங்கி இருந்துள்ளது. வளர்ந்து வரும் தொழிற்துறை நாடான சீனா, உலகில் பெருமளவு எண்ணையை நுகர்ந்து வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக சீனா வாங்கி வந்த எண்ணையின் அளவைக் குறைத்துள்ளது. உக்ரைன் பிரச்சினையின் விளைவாக, ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக, சைபீரிய எண்ணை கிடைக்கவிருப்பது ஒரு முக்கிய காரணம். 

உக்ரைன் பிரச்சினை, ஈராக்கில் ISIS பிரச்சினை ஆகியன, சந்தையில் எண்ணையின் விலையை அதிகரிக்கச் செய்யும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. தற்போது ஒபாமா ISIS அழிப்பு யுத்தம் பிரகடனம் செய்த பின்னர், தங்களது காட்டில் பண மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 

(தகவல் : Het Financieele Dagblad, 9. 9. 2014)

No comments

Powered by Blogger.