ISIS மீது விமான தாக்குதல்: இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அங்குள்ள எண்ணெய் கிணறு களையும் கைப்பற்றி உள்ளனர். சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சியாளர்கள் கூட்டத்திலும் ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, ஈராக் மற்றும் குர்தீஷ் பிராந்திய அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, ஈராக் மற்றும் சிரியா எல்லையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் வான்வழி தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்பட பல்வேறு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தங்களது நவீனரக போர் விமானங்களையும் தாக்குதலுக்கு அனுப்பி வைத்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் வான்வழி தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார். இதுதொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக விமான தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவாக 524 ஓட்டுகளும் எதிராக 43 ஓட்டுகளும் விழுந்தன. இதை தொடர்ந்து, விமான தாக்குதலில் இங்கிலாந்து ராணுவமும் கலந்து கொள்ளும் தீர்மானம் நிறைவேறியது. இதை தொடர்ந்து, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நடத்தும் வான்வழி தாக்குதலில் பங்கேற்க இங்கிலாந்து விமானப் படையின் அதிநவீன போர் விமானங்கள் விரைந்துள்ளன.
Post a Comment