பெளத்த பேரினவாத சாக்கடைக்குள் நாறிப் போயிருக்கின்ற இந்த அரசுடன்...!
(அபூஸமா)
ஒரு ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ மிக விரைவில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த ஒரு சூழலில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.பல வித விமர்சனங்களுடனும் குறைபாடுகளுடனும் இத்தேர்தல் நடந்து முடிந்த போதிலும் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் மனநிலையை ஓரளவுக்கு தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிர்பார்க்கப்பட்டது போல எதிர்காலத் தோல்விகளுக்கான தொடக்கமாக வர்ணிக்கப்படுகின்ற அதேவேளை தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு போயிருந்த எதிர்க்கட்சிகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் ஒரு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம்களைப் பொறுத்த வகையில் ஊவா மாகாண சபையில் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதில் கடந்த காலங்களில் இழைத்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள அம்மாகாண முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக பதுளை மாவட்ட முஸ்லிம்கள் மீண்டும் ஒரு முறை தவறியிருக்கிறார்கள். வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு பொதுச்சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம் மிக இலகுவாகப் பெறப்படவிருந்த அரிய வாய்ப்பைத் தட்டிக் கழித்திருக்கிறார்கள்.
முஸ்லிம் தேசிய அரசியலுடன் ஒன்றித்துப் போவதில் பதுளை மாவட்ட முஸ்லிம்கள் தொடர்ந்தும் பின்னிற்பது அம்மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்புக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. சமகால தேசிய அரசியலில் இரண்டு பேரினவாத கட்சிகளும் முஸ்லிம்கள் தொடர்பில் பின்பற்றும் இரட்டை வேடத்தை சரியாக புரிந்து கொள்ள மறுத்ததும்,வாக்களிப்பில் பெருமளவு அக்கறை செலுத்தாமல் இருந்ததும் இம்மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்புக்கு இன்னுமொரு காரணமாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதுளை மாவட்ட முஸ்லிம்கள் அளிக்கும் வாக்குகள் அக்கட்சியின் சிங்கள பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவே பயன்படும் என்ற பிரச்சாரம் கடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
அதேவேளை முஸ்லிம் பிரதிநிதியைப் பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் மீண்டும் அரச கூட்டணிக்குச்சென்று சங்கமித்துவிடுமோ என்ற நியாயமான சந்தேகத்தையும் இத்தேர்தலில் பதுளை முஸ்லிம்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையையும் மறுதலிக்க முடியாது.
எது எவ்வாறாயினும்,இன்னும் 5 வருடங்களுக்கு ஊவா மாகாண முஸ்லிம்கள் அந்நியர்களின் வாசல்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதே அவர்களின் தலையெழுத்தாகி விட்டது. ''ஒரு சமூகத்தின் தலைவிதியை இறைவன் மாற்ற மாட்டான், அந்த சமூகம் தனது தலைவிதியை மாற்றிக் கொள்ளாதவரை'' (அல்குர்ஆன்)
கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது பதுளையில் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் சரிவடையாதபோதும் ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ளும் நிலைக்கு இன்னும் தன்னை வளர்த்துக் கொள்ள இதுவரைக்கும் முடியாமலிருப்பது அக்கட்சியின் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.
தேர்தல்களின் போது மட்டும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதும் தேர்தல் முடிந்த கையுடன் 'கூட்டுப் பொறுப்பு' அல்லது 'இணக்க அரசியல்' என்று கூறிக்கொண்டு அரசாங்கத்திற்கு சாமரம் வீசுகின்ற மலினமான அரசியலைத் தொடர்வதுமான முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முஸ்லிம்கள் தொடர்ந்தும் தயாரில்லை என்பதும் இத்தேர்தலில் மிகவும் பக்குவமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. அரசாங்கத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ள அதேசமயம் பிரதான எதிர்க்கட்சிகளுடனும் உடன்பாடில்லாத ஒரு அரசியல் காய் நகர்த்தல் அல்லது அணுகுமுறை நமது சமூகத்தின் பாதுகாப்புக்கும் அதேபோல அபிவிருத்திக்கும் எந்தளவு அனுகூலமாக அமையப்போகிறது என்ற நியாயமான கேள்வியும் சமூக அக்கறையுள்ள சக்திகளால் எழுப்பப்பட்டுள்ளது.
எனவே பெளத்த பேரினவாத சாக்கடைக்குள் நாறிப் போயிருக்கின்ற இந்த அரசுடன் ஒட்டியிருந்து தொடர்ந்தும் முஸ்லிம் சமூக அரசியலை முன்கொண்டு செல்வதில் உள்ள பாதகங்களை கடந்தகால அனுபவங்களினூடாக புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளை திட்டமிடுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முஸ்லிம் காங்கிரஸ் தன்னை மிக அவசரமாக தயார் படுத்தவேண்டுமென்பதே பலரதும் எதிர்பார்ப்பாகும்.அது நிறைவேறுமா?
Post a Comment