ஈரானில் மரண தண்டனை கைதி விடுதலை
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான அப்துல்லா அல் மன்சோரி(69) ஈரானிய நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வந்தார். தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2007ஆம் ஆண்டில் ஈரானிய அரசு இவரைக் கைது செய்தது. முதலில் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட இவருக்குப் பின்னர் 15 ஆண்டு கால சிறைத்தண்டனையாக அது மாற்றப்பட்டது.
தன்னாட்சிக்குப் பாடுபட்ட பெரும்பான்மை சன்னி அரேபிய மக்கள் நிறைந்த வடக்கு ஈரானில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் அவர் தனது பணியைச் செய்து வந்தார். எண்ணெய்வளம் நிரம்பிய இந்தப் பகுதி 2000 ஆண்டுகளின் மத்தியில் பிரிவினைவாதிகளின் குண்டு தாக்குதல்களுக்கு ஆளானது.
மேலும் இங்குள்ள அரேபியர்களின் நிலத்தை அபகரித்து எதிர்ப்பாளர்களைக் கொன்று அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அடக்குவதாக அப்போதைய அரசை மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் ஈரானின் நட்பு நாடான சிரியாவில் கைது செய்யப்பட்ட இவர் ஈரானுக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு அரசியல் எதிர்ப்பாளர்களைக் கண்டனம் செய்யப் பயன்படுத்தப்படும் மத குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் திடீரென மன்சோரி விடுவிக்கப்பட்டு கடந்த மாதம் 20ஆம் தேதி நெதர்லாந்திற்குத் திரும்பிவிட்டதாக அவரது மகன் அட்னன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவரது விடுதலைக்காக நெதர்லாந்து அரசும் முயற்சித்தது என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்ஸ் டிம்மர்மான்ஸ் ஈரானிய அரசின் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment