தென்னாபிரிக்காவில் ஓரினச்சேர்க்கை ஆதரவு பள்ளிவாசலுக்கு பூட்டு
தென்னாபிரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவும் பெண்கள் தலை மையில் தொழுகை நடத்த அனுமதிக்கும் வகையிலும் திறக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை காலவரையறை இன்றி மூட உள்ளுர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலில் நகர சபையின் சட்டத்தை மீறி வாகன தரிப்பிடத்திற்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்று கேப் டவுன் நகரசபை குறிப்பிட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்க இந்த பள்ளிவாசல் உதவும் என்று சர்ச்சைக்குரிய பள்ளிவாசலின்; நிறுவனரான தாஜ் ஹார்கி குறிப்பிட்டுள்ளார்.
"கேலிக்குரிய சட்டங்களை பயன்படுத்தி நகர சபை பள்ளிவாசலை மூடப் பார்க்கிறது. நான் எவருக்கும் அச்சுறுத்தலாக இருப்பதில்லை" என்று ஹார்கி குறிப்பிட்டுள்ளார். எனினும் களஞ்சியசாலையாக இருந்த ஒரு இடத்தை பள்ளிவாசலாக மாற்றுவது குறித்து அனுமதி கோரப்படவில்லை என்று நகரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு முன்னர் பாதுகாப்பு மற்றும் சுகாதார விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் இந்த பள்ளிவாசல் திறக்கப்பட்டபோது அங்கு தொழ வந்தவர்களை விடவும் ஊடகவியலாளர்களே அதிகமாக ஒன்று திரண்டிருந்தனர். இந்த பள்ளிவாசலை விட்டு முஸ்லிம்கள் ஒதுங்கி நிற்கும்படி தென்னாபிரிக்க நீதித்துறை கவுன்ஸில் அறிவித்திருந்தது.
Post a Comment