ஒபாமா உணவருந்த, மோடியின் முன்னே வைக்கப்பட்ட தட்டு காலியாகவே இருந்தது..
5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.
தனி விமானம் மூலம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் வரவேற்றார்.
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகையான ‘பிளையர் ஹவுஸ்’ நோக்கி வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் குழுவுடன் காரில் சென்ற மோடியை சாலையோரங்களில் கூடி நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கையை அசைத்து, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
பின்னர், வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்ரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அன்புடன் வரவேற்றனர். பின்னர் அவரை விருந்து அறைக்கு ஒபாமா அழைத்துச் சென்றார்.
அவருடன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதர் ஜெய்சங்கர், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
அழகிய வேலைப்பாடுடன் கூடிய மிகப்பெரிய மேஜையில் இந்தியப் பிரதமருக்காக தயாரிக்கப்பட்ட ஏராளமான உணவு வகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வேளையிலும், நவராத்திரியை முன்னிட்டு நோன்பு நோற்றிருக்கும் மோடி, வெறும் வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே பருகினார்.
துர்கையம்மனை போற்றித் துதிக்கும் வகையில் ‘நவராத்திரி’ எனப்படும் திருவிழாவை கொண்டாடுவது இந்து மக்களின் பக்தி சார்ந்த மரபாக இருந்து வருகின்றது. நவராத்திரி எனப்படும் இந்த ஒன்பது நாட்களில் நோன்பிருக்கும் பழக்கத்தை பிரதமர் மோடி நீண்ட காலமாக கடைபிடித்து வருகிறார்.
வழக்கம் போல் இவ்வாண்டின் நவராத்திரியின்போதும் நோன்பு நோற்க முடிவு செய்த மோடியின் முந்தைய திட்டப்படி, இந்த நோன்புக் காலத்தில் அவர் அமெரிக்காவில் தங்க நேர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
அரசு முறை மரபின்படி, மோடியின் முன்னே வைக்கப்பட்ட தட்டு காலியாகவே இருந்தது. உணவருந்தும் மேஜையின் முன்பு தன்னுடன் அமர்ந்திருந்த ஒபாமா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை, ’வழக்கம் போல் நீங்கள் உணவு அருந்துங்கள்’ என்று கேட்டுக் கொண்ட மோடி, வெறும் தண்ணீரை மட்டுமே பருகி, அமெரிக்க அதிபர் அளித்த அரசு முறை விருந்தினை நிறைவு செய்தார்.
Post a Comment