பின்லேடன் மருமகனுக்கு ஆயுள் தண்டனை
உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தாகள் 11-9-2001 அன்று அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் 100 மாடிகள் கொண்டநியூயார்க்கின் இரட்டை கோபுர கட்டிடத்தை மோதி தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்து நொறுங்கியது.
4 விமானங்களில் இருந்த அனைவரும் பலியானார்கள். இந்த தாக்குதலில் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுர கட்டிடங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்தது.
தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் வரை எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
இந்த தாக்குதல் தொடர்பாக குவைத்தை சேர்ந்த சுலைமான் அபு காய்த் அமெரிக்க உளவுத்துறையினர் கைது செய்தனர். பின்லேடனின் இளைய மகள் பாத்திமாவை திருமணம் செய்துள்ள இவர், கைது செய்யப்படுவதற்கு முன்னர் வரை பின்லேடனின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார்.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அல் கொய்தா வெளியிட்ட வீடியோ செய்தியில் மாமனார் பின்லேடனுடன் தோன்றிய அபு காய்த், அமெரிக்க அரசுக்கு மிரட்டல் செய்தி விடுத்திருந்தான்.
‘உங்களுக்கு(அமெரிக்கர்கள்) எதிராக மிகப்பெரிய படை உருவாகிக் கொண்டிருக்கின்றது. யூதர்கள், கிருஸ்துவர்கள் மற்றும் அமெரிக்கர்களை இந்தப் படை அழிக்க போகின்றது.
இந்தப் புயல் ஓயவே ஓயாது. இந்த விமான தாக்குதல் புயல்களும் ஓயப்போவதில்லை’ என்று அந்த வீடியோவின் மூலம் எச்சரித்திருந்தார். முஸ்லிம்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் யாரும் இனி விமானங்களில் பயணம் செய்யாதீர்கள். உயர்ந்த மாடி வீடுகளில் குடியிருக்காதீர்கள் என்று உபதேசமும் செய்திருந்தார்.
நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் தொடர்பாக மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அபு காய்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மார்ச் மாதம் ஆஜராகி வாக்குமூலம் அளித்த அபு காய்த் கூறியதாவது:-
இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு, என்னைச் சந்திக்க பின்லேடன் விரும்பினார். இதனையடுத்து காந்தஹாரில் (ஆப்கானிஸ்தான்) இருந்து 3 மணிநேரம் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றுக்கு சென்றேன். அங்கே இருந்த பின்லேடன், என்னிடம் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்கு காரணமானவர்களில் நாமும் (அல்கொய்தாவும்) ஒருவர் என்றார்.
பிறகு இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று என்னிடம் கருத்து கேட்டார். அதற்கு நான், இந்த தாக்குதலை நடத்தியது நீங்கள்தான் என்பது நிரூபணமானால், உங்களை கொல்லும் வரையிலும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் தலிபான் அரசை அகற்றும் வரையிலும் அமெரிக்கா ஓயாது என்று தெரிவித்தேன்.
அதற்கு என்னைப் பார்த்து, "நீ எதிலும் குறை காணும் நபர்' என்று பின்லேடன் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை தகர்த்து, உலக நாடுகளை எச்சரிக்க பின்லேடன் விரும்பினார். அதற்காகவே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் குறித்து முன்கூட்டியே எனக்குத் தெரியாது. தொலைக்காட்சி செய்திகள் மூலமே தெரிந்து கொண்டேன் என்று அபு காய்த் வாக்குமூலம் அளித்தார்.
இவ்வழக்கில், மன்ஹாட்டன் நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் சுலைமான் அபு காய்த்துக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி லெவிஸ் கப்லான் உத்தரவிட்டார். அமெரிக்கர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காகவும், தீவிரவாதிகளுக்கு தேவையானவற்றை வழங்கியதற்காகவும் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த தண்டனையை தவிர, தற்போது 48 வயதாகும் அபு காய்த்துக்கு அமெரிக்காவிலும், உலகின் இதர பகுதிகளிலும் உள்ள சொத்துகளை சொந்தம் கொண்டாடும் உரிமையும் பறிக்கப்படுவதாக மண்ஹாட்டன் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
’இந்த தண்டனையின் மூலம் இனி உயிர் உள்ளவரை சுலைமான் அபு காய்த் சிறையை விட்டு வெளியே வர முடியாது’ என்று இவ்வழக்கை நடத்தி வந்த அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment