''இலங்கை முஸ்லிம்கள் பிறநாட்டு போராட்டங்களை, இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் கிடையாது''
-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு சிந்தனை முகாம்களில் இருந்தாலும் தங்களுக்குள் நிலவும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தொடர்ந்தேர்ச்சியான பாரிய முரண்பாடுகளாகவோ, பிணக்குகளாகவோ குழுச்சண்டைகளாகவோ இதுவரை காலமும் வளர்த்துக் கொண்டதில்லை.
இலங்கை முஸ்லிம்கள் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்கு மகத்தான பங்களிப்பினைச் செய்தவர்கள், தமது உரிமைகளுக்காக வன்முறையை நாடாது ஜனநயாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் வரலாறு நெடுகிலும் பங்கெடுத்தவர்கள், யுத்தமாயினும் சமாதானமாயினும் ஏனைய சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாது பாரிய விலையை செலுத்தியவர்கள், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், சுயாதீனத்திற்கும், பொருளாதார சுபீட்சத்திற்கும் சமாதன சகவாழ்விற்கும் தேசப்பற்றுடன் கூடிய பங்களிப்பினைச் செய்தவர்கள்.
ஆன்மீக அமைப்புக்களாக இருந்தாலும் சரி, பல்வேறு முற்போக்கு இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளாக இருந்தாலும் சரி இஸ்லாமிய அறிவு ஞானத்தையும் கற்கைகளையும் முஸ்லிம் உலகின் பல பாகங்களில் இருந்தும் உள்வாங்கி இருந்தாலும் தமது கால சூழ்நிலைகளுக்கும், களநிலவரங்களுக்கும் ஏற்ப இந்த தேசத்திற்கே உரிய அழகிய இஸ்லாமிய பாரம்பரியங்களை பேணி வருபவர்கள்.
அறபு இஸ்லாமிய உலகில் நிலவும் கிலாபாத்து தொடர்பான வரலாற்று குரோதங்களை அல்லது அவ்வப்பிராந்தியங்களில் இடம்பெறுகின்ற பூகோள மற்றும் பிராந்திய அரசியல் நகர்வுகளின் இஸ்லாமிய முலாம் பூசப்பட்ட உள்வீட்டு மோதல்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்யாதவர்கள். அவற்றின் பின்னால் உள்ள மேலைத்தேய, மத்திய கிழக்கு யூஉத சியோனிஸ சிலுவை சக்திகளின் சதி வலைப்பின்னல்களை சரியான கோணத்தில் புரிந்து வைத்திருப்பவர்கள்.
இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளை,அது முழு மனித குல விமோசனத்திற்கும் முன் சமர்ப்பிக்க விரும்புகின்ற சிறந்த உம்மத்தின் பண்புகளை, பணிகளை அவற்றின் பிரதான இலக்குகளை, சித்தாந்தங்களை கோட்பாடுகளை சரியான பரிமாணங்களில் உள்வாங்கிய மிகச் சிறந்த புலமைச் சொத்துக்களையும், அறிஞர் குலாம்களையும், மிகச் சிறந்த அறிவும் நுணுக்கமும் தெளிவும் இஸ்லாமிய விழிப்புணர்வும் கொண்ட புத்தி ஜீவிகளையும்,கல்விச் சமூகத்தையும் கொண்டவர்கள்.
நாம் இஸ்லாமியர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்கள், அவற்றின் பின்னால் உள்ள,தேசிய பிராந்திய, மற்றும் கேந்திர முக்கியத்துவமுள்ள அரசியல், பொருளாதார மூலோபாயங்கள், இராணுவ மற்றும் இராஜ தந்திர நகர்வுகள், நமது சமூக பொருளாதார அரசியல் பின்னடைவுகள் குறித்து மிகவும் தெளிவான நிலைப்பாடுகளில் ஒன்றுபட்டு செயற்பட எத்தனிப்பவர்கள்.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏதிராக புதிய உலக ஒழுங்கில் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளும், யூத சியோனிஸ சிலுவை சக்திகளும், முடுக்கிவிட்டுள்ள இஸ்லாமோபோபியா, இஸ்லாமிய ஷரீஅத்து, கிலாபத்து, ஜிஹாது, இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள், இஸ்லாமிய பாரம்பரியங்கள் குறித்து திட்டமிட்ட அளவில் அவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற காழ்ப்புணர்ச்சிப்பரப்புரைகள், கூலிப்படைகளூடாக காட்சிப் படுத்துகின்ற அமுலாக்க வியாக்கியானங்கள் குறித்தெல்லாம் இலங்கை முஸ்லிம்களுக்கு தெளிவான ஒரு பார்வை இருக்கிறது.
இலங்கை முஸ்லிம்கள் இந்த தேசத்தில் எதிர்கொண்டுள்ள அண்மைக்கால சவால்களுக்கு இந்த தேசத்தில் உள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த அறுதிப் பெரும்பான்மையான நல்ல மனித நேய சக்திகளுடன் இணைந்து முகம் கொடுக்கக் கூடிய வல்லமையும் துணிவும் எங்களுக்கு இருக்கிறது.
நவீன உலகில் முஸ்லிம் உம்மத்து எதிர்கொண்டுள்ள சவால்களுக்கும், யுக முடிவின் பொழுது முஸ்லிம் உம்மத்து எதிர்கொள்கின்ற சவால்களுக்கும் இந்த தேசத்து முஸ்லிம்கள் எத்தகைய விதத்தில் முகம் கொடுக்க வேண்டும், பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற சிந்தனைகளை,வழிகாட்டல்களை வழங்கவல்ல அறிவு மற்றும் கல்விப் பாரம்பரியம் எமக்கு இருக்கின்றது.
முஸ்லிம் உலகில் பரம்பரை வைராக்கியங்களை படுகொலைகளாக சர்வதேச சமூகத்திற்கு அரங்கேற்றி பல இலட்சக்கணக்கில் மனித உயிர்களைக் காவுகொள்கின்ற இஸ்லாமிய கிலாபாத்திற்கும், ஷரீஅத்திற்கும், அறப் போரிற்கும் அமானுஷ்ய அர்த்தங்களைக் கற்பிக்கின்ற அறியாமைக்கால அக்கிரமங்களை கோத்திரச் சண்டைகளை சர்வதேச சதிகாரர்களின் நலன்களுக்கு ஏற்ப அரங்கேற்றுகின்ற அல்லது அவர்களால் நகர்த்தப் படுகின்ற தீவிரவாத இஸ்லாமிய அடையாளம் கொண்ட முகாம்களிடமிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தீர்வுகள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய தேவைகள் அதற்கான ஆன்மீக அறிவு வறுமை எங்களிடம் இல்லை.
கடந்த பல தசாப்தங்களாக சர்வதேச முஸ்லிம் உம்மத்துப் போன்றே நாமும் கருத்து வேறுபாடுகளால் பிளவுண்டு உள்வீட்டில் முரண்பாடுகளை முற்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றோம், சமூக அரசியல், பொருளாதார,கல்வி, பண்பாட்டு வாழ்வில் நாம் பின்னடடைவுகளை சந்தித்திருக்கின்றோம், அவற்றின் விளைவுகளை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கின்றோம், என்றாலும் தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் சொந்தக் கண்களை இருக்க மூடிக்கொண்டு மூடர்களாகவும், முடவர்களாகவும், செவிடர்களாகவும் குருடர்களாகவும் எமக்கான தீர்வுகளை நாம் முஸ்லிமுலகில் எந்த பிழையான தரப்புக்களிடம் இருந்தும் இறக்குமதி செய்யத் தயாரில்லை.
அல்காயிதாவாக இருந்தாலும் சரி, ஷீயா சுன்னி கிலாபாவாக இருந்தாலும் சரி, தாலிபான் ஆக இருந்தாலும் சரி, இலங்கை முஸ்லிம்களுக்கு எந்தவொரு பிறநாட்டு போராட்டங்களும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய அவசியமும் அவசரமும் அறவே கிடையாது.
Post a Comment