Header Ads



பிரிட்டன் தூதுவர் மீது சஜின்வாஸ் தாக்குதல், மூடிமறைக்க ஜனாதிபதி செய்த முயற்சி தோல்வி

-Gtn-

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்குள்ளான பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் ஜனாதிபதியின் அமெரிக்கா விஜயத்தின் போது நடைபெற்றிருந்தது.

ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு இலங்கை விமான சேவையின் பணிப்பாளர்களில் ஒருவரான டிலான் ஆரியவங்ச தனது வீட்டில் விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.

இதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன, வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஷேணுகா குணவர்த்தன, பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் அதிக மதுபோதையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் சடுதியாக அவர் தூதுவர் கிறிஸ் நோனிஸின் முகத்தில் பலமாக அறைய, அதனை எதிர்பாராத கிறிஸ் நோனிஸ் கீழே விழுந்துள்ளார்.

அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை கால்களால் உதைத்துள்ளார். இதன் போது அவரது கால்விரல் ஒன்றில் சுளுக்கு ஏற்பட்டு பின்னர் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் நேரிட்டுள்ளது.

இதனையடுத்து கடும் அவமானத்துக்குள்ளான தூதுவர் கிறிஸ் நோனிஸ் விருந்து வைபவத்திலிருந்து உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார். பின்னர் ஜனாதிபதியை தனியாக சந்தித்து தனது ராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்.

இந்த சம்பவத்தை மூடிமறைக்கவும், ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கவும் ஜனாதிபதி பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் விடயம் எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்து விட்டது.

இந்நிலையில் கலாநிதி கிறிஸ் நோனிஸ் தற்போது தனது ராஜினாமாக் கடிதத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எதுவித முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

1 comment:

  1. இவரைப் போன்றவர்களால் 'இலங்கையர்கள் என்றால் காட்டுமிராண்டிகள்' என்றே கணக்கிலெடுத்துக் கொள்ளப்போகின்றது சர்வதேசம்!

    ReplyDelete

Powered by Blogger.