சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு, அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்ட தீர்மானம்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்டுவதற்கு மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று புதன்கிழமை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்மொழிய அதனை ஆளும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரித்தனர்.
இந்த பீச் பார்க் நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பிறந்த தினமான எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதியன்று இதனைத் திறப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் இதன்போது தெரிவித்தார்.
அதேவேளை சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு எமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் நாமத்தை சூட்டுவதற்கும் அதனை அவரது பிறந்த தினத்தில் திறப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்ற மாநகர முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் குறிப்பிட்டார்.
இந்த சபை அமர்வில் வேறு பல விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர்.
சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்பு, கல்முனையில் புகையிரத ஆசனப் பதிவுக் காரியாலயம் அமைத்தல் மற்றும் சாய்ந்தமருது வரவேற்புக் கோபுரம் போன்ற விடயங்கள் தொடர்பில் உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் பிரஸ்தாபித்தார்.
நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானம் தொடர்பில் உறுப்பினர்களான எம்.எச்.நபார், எம்.சாலிதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பை கூளங்களைப் போடுதல், வீதிகளில் மண், கல் மற்றும் கட்டிடப் பொருட்களை குவித்து வைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவைக்கை எடுத்து அவர்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடப்பட வேண்டியதன் அவசியம் பற்றி உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் வலியுறுத்திப் பேசினார்.
மருதமுனையில் ஒரு பீச் பார்க் அமைப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மாநகர சபை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர் ஏ.எம்.முஸ்தபா உரையாற்றினார்.
கல்முனையில் இருந்து இரவு நேர பஸ் சேவைகள் நடாத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் வலியுறுத்தினார்.
கல்முனையின் மேற்கு எல்லையான கிட்டங்கி உட்பட தமிழ் பகுதிகளும் நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பிரகாசமூட்டப்பட வேண்டும் என்று உறுப்பினர் எம்.ஜெயக்குமார் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய வறட்சி காரணமாக தமிழ் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றி உறுப்பினர் கமலதாசன் விபரித்துக் கூறினார்.
Post a Comment