பாரதீய ஜனதா கட்சியுடன், பொதுபல சேனா சந்திப்பு
பெளத்த இந்து மக்களை அழிக்கும் இனவாத செயற்பாடுகளை தடுத்து தமிழ் சிங்கள மக்களைப் பாதுகாப்பதில் நாம் அக்கறை செலுத்துவோம் இந்த விடயங்களுக்கு இந்தியாவும் எமக்கு துணை நிற்கவேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பினர் பா.ஜ.க.வின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை வந்துள்ள பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ், கட்சியின் வெளிவிவகார அழைப்பாளர் விஜய் ஜொலி ஆகியோர் நேற்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
கிருலப்பனையில் உள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போதே தமது செயற்பாட்டிற்கு இந்தியா துணை நிற்கவேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே கருத்து தெரிவிக்கையில் ;
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தேசிய அமைப்பாளர் விதாரந்ததீய நந்ததேரர் ஆகியோர் மேற்கொண்டிருந்தோம். இந்திய - இலங்கை உறவு முறை மிக நீண்ட காலமாக உள்ளது. அரசியலுக்கு அப்பால் கலாசார பொருளாதார ரீதியிலும் இரு நாடுகளும் நல்ல உறவினை மேற்கொண்டு வருகின்றது. அதேபோல் இந்து பெளத்த உறவு முறையும் மிக நல்ல நிலையில் நிலவுகின்றது. எனவே, இவற்றினை மேலும் பலப்படுத்த வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் நல்ல உறவினை ஏற்படுத்தி வருகின்றனர். இது மேலும் பலமடைய வேண்டும். அதேபோல் பௌத்த - இந்து தொடர்புகளும் நெருக்கமானவையே. ஆகவே, தொடர்ந்தும் இந்திய - இலங்கை உறவு முறையானது அரசியல், கலாசார மத அடிப்படையில் பலமடைய வேண்டும். மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதில் பொதுபல சேனா துணை நிற்கும். அதேபோல் இலங்கையில் பௌத்த தமிழ் மக்களை அழிக்கும் இனவாத செயற்பாடுகளை தடுத்து தமிழ் - சிங்கள மக்களை பாதுகாப்பதிலும் நாம் அக்கறை செலுத்துவோம். எனவே, இந்தியாவும் இவ்விடயங்களில் எமக்கு துணை நிற்க வேண்டும் எனவும் நாம் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment