அமெரிக்க விமானம், ஈரானில் அவசரமாக தரையிறங்கியது
ஆப்கானிஸ்தானின் பக்ராம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவதளத்திலிருந்து 100 அமெரிக்கர்களுடன் துபாய்க்குக் கிளம்பிய தனியார் விமானம் ஒன்று பயணத் திட்டத்தில் இருந்த சிக்கல்கள் காரணமாக நடுவில் ஈரானில் இறங்கியது என்றும், ஆனால் அதன் பின்னர் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி துபாயை அடைந்தது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று தெரிவித்துள்ளது.
பக்ராமிலிருந்து கிளம்பி சில மணி நேரங்கள் சென்ற பின்னும் அவர்கள் துபாய் விமான நிலையத்திற்கு தங்களின் பயணத் திட்டங்களைத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அதுபோல் ஈரான் வான்வெளியை இந்த விமானம் அடைந்தபோது அவர்கள் அதற்குமுன்னரே இதனைக் கடந்திருக்க வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கருதினர்.
அதனால் அந்த விமானத்தை அவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்குத் திரும்புமாறு கூறினர். ஆனால் அதில் எரிபொருள் குறைவாக இருந்ததால் ஈரானின் பந்தர் அப்பாஸ் நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட விமானம் பத்திரமாக துபாய் வந்திறங்கியது என்று தெரிவித்த உள்துறை அலுவலகத் தகவல் தொடர்பாளர் எந்த ஈரானிய ஜெட் விமானங்களும் இதனைத் தொடரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பயணிகள் பத்திரமாகத் தரையிறங்க உதவிய அனைத்துத் தரப்பினரையும் தாங்கள் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 1980ஆம் ஆண்டு டெஹ்ரானில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றிய ஈரானிய மாணவர்கள் அங்கிருந்த அமெரிக்கர்களை 444 நாட்கள் பிணையக் கைதிகளாக வைத்திருந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும், ஈரானுக்குமான உறவு சிதையத் தொடங்கியது.
சமீபத்திய சில வருடங்களில் நிலைமை ஓரளவு மேம்பாடு அடைந்துள்ளபோதும் ஈரானின் அணுசக்தி பயன்பாடு குறித்து இன்னமும் இருதரப்பினருக்கும் முழுமையான சம்மதம் ஏற்படாத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment