இலங்கை முஸ்லிம்களுக்கு பேஸ்புக் மூலம் எச்சரிக்கை - சிங்கள கடும்போக்களர்கள் கண்காணிப்பு
(தமிழில் பூரண மொழிபெயர்ப்பு GTN)
இணைய ஊடங்களின் வழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரோதப் பிரச்சாரங்களினால் சிறுபான்மை சமூகங்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றன. இலங்கை ஊடகத் தளங்களில் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களைக் கொண்ட செய்திகள் தகவல்களின் பிரச்சாரம் அதிகரித்துள்ளது.
இவ்வாறான பிரச்சாரங்களின் ஊடாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்கள் தாக்குதல்களை எதிர்நோக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் குரோத உணர்வைத் தூண்டும் ஊடகப் பிரச்சாரங்களின் விளைவுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய ஊடகத் தளங்களைப் போன்றே இணைய ஊடக பார்வையிடுவோரின் எண்ணிக்கையிலும் சடுதியான உயர்வு பதிவாகியுள்ளது. ஏனைய எந்தவொரு ஊடகத்தை விடவும் இணைய ஊடகங்கள் ஆழமானதும் விசாலமானதுமாக வளர்ச்சியடைந்துள்ளது.
எனவே குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் குரோதப் பிரச்சாரங்களை செய்யக்கூடிய ஓர் சுலப வழிமுறையாக இணைய ஊடகங்கள் அமைந்துள்ளன.
குறிப்பிட்ட இன சமூகம், மதச் சமூகம், தனிப்பட்ட நபர்கள், நிறுவனம், கட்சி, ஓர் குழு என பல்வேறு மட்டத்தில் குரோத உணர்வை அல்லது முரண்பாட்டு பிரச்சாரங்களை மேற்கொள்ள இணைய ஊடகங்கள் வழியமைக்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செய்யப்பட்ட பிரச்சாரங்களே பல தடவைகள் தமது பள்ளிவாசல் தாக்குதலுக்கு இலக்காவதற்கான பிரதான ஏதுவென, தம்புள்ள ஹாய்ரியா ஜூம்மா பள்ளிவாசலின் நிர்வகக் குழுப் உறுப்பினர் எஸ்.வை. யூசுப் சலீம் தெரிவிக்கின்றார்.
கடந்த வாரத்திலும் இரண்டு பெற்றோல் குண்டுகள் வீசி எறியப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.
'முஸ்லிம்களுக்கு இந்த நாட்டை தாரை வார்த்துக்கொடுக்க முடியாது' 'முஸ்லிம்கள் இலங்கையை அரேபியாவாக மாற்ற முயற்சிக்கின்றனர்' 'இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் உருவாகின்றன்', 'முஸ்லிம் கடும்போக்குவாதிகளினால் நாட்டில் பாரிய அழிவுகள் ஏற்படும்' என்றெல்லாம் பௌத்த கடும்போக்குடைய அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன என அவர் தெரிவிக்கின்றார்.
தாமும் தமது முஸ்லிம் நண்பர்களும் பேஸ்புக் மூலம் அச்சுறுத்தப்பட்டதாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் முறைப்hபடு செய்ய நேரிட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பேஸ் புக் குரோதப் பிரச்சாரங்களுக்கு எதிராக பதிலளித்தால் திட்டமிட்ட வகையில் 40 – 50 எதிரான கமன்ட்கள் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளை பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் தெரிவிக்கின்றார்.
21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் 2.3 மில்லியன் மக்கள் சமூக வலையமைப்பு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர், இதில் அதிகமானவர்கள் ஆண்கள் என மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் தெரிவிக்கின்றது.
சமூக வலைத்தளங்களில் பணியாற்றுவதற்காக விசேட இளைஞர் குழு ஒன்றை நியமித்துள்ளதாக சிங்கள கடும்போக்குவாத அமைப்பான சிஹல ராவய அமைப்பின் தலைவர் மாகல்ல சுதாந்த தேரர் தெரிவிக்கின்றார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் உலக ஜிஹாட் இயக்கங்கள் தொடர்பில் சமூக வலையமைப்புக்களின் ஊடாக அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது எனவும் இதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் குறிப்பிடுகின்றார்.
'பௌத்த தீவிரவாதிகள் கிடையாது, எனினும் முஸ்லிம் தீவிரவாதிகள் இருக்கின்றார்கள். முஸ்லிம் தீவிரவாதம் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் அம்பலப்படுத்தியிருந்தோம் எனினும் அதிகாரிகள் அதனை கருத்திற்கொள்ளவில்லை. எனினும் தற்போது இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்படுவதாக இன்டர்போல் அறிவித்துள்ளது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தமது அமைப்பு போலியான குற்றச்சாட்டுக்களை எவர் மீதும் சுமத்துவதில்லை. மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் பேஸ் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும் என' அவர் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளைத் தூண்டும் படங்கள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் பதற்ற நிலைமையை வன்முறைகளைத் தூண்ட ஏதுவாகின்றது.
கடந்த ஜூன் மாதம் அலுத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரை முஸ்லிம்கள் தாக்கியதாக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் பாரியளவு வன்முறைகள் வெடிக்க வழியமைத்தது. இந்த மோதல் சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 200க்கும் மேற்பட்ட கடைகள் வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறைகளினால் 2200 பேர்இடம்பெயர்ந்தனர்.
'சுதந்திரம் வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்', 'பௌத்த கடும்போக்காளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுதந்திரம், மற்றையவர்களை காயப்படுத்தக் கூடாது' என சலீம் குறிப்பிடுகின்றார்.
தொடர்ச்சியாக குரோத உணர்வைத் தூண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது ஆரோக்கியமானதல்ல என சலீம் தெரிவிக்கின்றார்.
நாடு முழுவதிலும் குரோதம் என்ற பெற்றோல் ஊற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு தீக்குச்சியினால் கூட அழிவை ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பௌத்த கடும்போக்காளர்களினால் நடத்தப்பட்டு வரும் பேஸ் புக் கணக்குகளில் கிறிஸ்தவ திருச்சபைகள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய கிறிஸ்தவ மதபரப்புரைப் பேரவையின் சட்ட ஆலோசனை இணைப்பாளர் யாமினி ரவீந்திரன் தெரிவிக்கின்றார்.
பல்வேறு போலிக் குற்றச்சாட்டுக்கள் தமது அமைப்பின் மீது சுமத்தப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிடுகின்றார்.
குரோதப் பிரச்சாரங்கள் அடிக்கடி செய்யப்படுகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆண்டில் 60க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
பௌத்த மதம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான ரூகி பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
Post a Comment