ஐ.தே. க. மீது கொண்ட நல்லெண்ணத்தினால், மக்கள் அலை வெள்ளம் போன்று ஒன்றிணைகின்றனர்
வருடாந்த மாநாட்டிற்கு பின்பு ஐ.தே. கட்சியின் மீது கொண்ட நல்லெண்ணம் காரணமாக மக்கள் அலை வெள்ளம் போன்று ஒன்றிணைந்து வருகின்றனர். தற்போது எமக்கு பதவி மோகம் கிடையாது. மாறாக இவ்வரசை அடியோடு ஒழித்து கட்டுவதே எமது நோக்கமாகும் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வரட்சியினால் பாதிக்கப்பட்டோருக்கு 6000 ரூபா பெறுமதியான உலர் உணவுகளை வழங்கும் அரசாங்கம் வெள்ளையர்களை போன்று அரசு மக்களிடமிருந்து வேலை வாங்கி குறித்த பணங்களை மீள பெறுகின்றது எனவும் சாடினார்.
வரட்சியால் பாதிக்கப்பட்ட லுனுகம் வெஹர பிரதேச செயலகத்தின் மக்களுக்கு 30 இலட்சம் ரூபா செலவில் தண்ணீர் பவுசர் மூலமாக சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தற்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எவருடைய உதவியுமின்மையால் மன ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி சிறுநீரக நோய் போன்ற நோய்களுக்கு அம்பாந்தோட்டை மக்கள் உள்ளாகியுள்ளனர். வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை அரசாங்கம் எவ்வித உதவியையும் வழங்கவில்லை. மாறாக எதிர்க்கட்சியை சேர்ந்த எங்களுக்கு இப்பிரச்சினையை தீர்க்கும் அளவுக்கு பணம் கிடையாது. இருப்பினும் எதிர்க்கட்சி என்ற வகையில் இத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு மும்முரமாக செயற்பட்டு வருகிறோம்.
நாட்டின் சம்பிரதாய எதிர்க்கட்சி அரசாங்கத்தை விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கும். இருப்பினும் அம்பாந்தோட்டையில் சம்பிரதாய எதிர்க்கட்சியிலிருந்து விலகி நவீன எதிர்க்கட்சியாக நாம் உருவெடுத்துள்ளோம்.
அரசாங்கமானது வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000ரூபா பெறுமதி வாய்ந்த உலர் உணவு பொருட்களை வழங்கி குறித்த பணத்தை மீளப் பெறும் வகையில் 12 நாட்கள் மக்களிடம் வேலை வாங்குகிறது. இத்தகைய செயலானது நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் வரி செலுத்த முடியாத அப்பாவி மக்களிடமிருந்து வீதிகளை நிர்மாணிப்பதற்கு வேலை வாங்கியது போன்றாகும். எனவே, 6,000 ரூபாவிற்காக 12 நாட்கள் வேலை வாங்குவது பெரும் அநியாயமாகும். இதனால் ஒரு நாளைக்கு 500 ரூபாவே வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில் ஐ.தே. கட்சி ஆட்சி காலத்தில் இருந்த மக்கள் நலன் சேவைகளை இவ்வரசு தலைகீழாக மாற்றியுள்ளது. இதற்கு பதிலாக மக்களுடைய பணங்களை விரயம் செய்கிறது.
எனவே, தற்போது இவ்வரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் 68 ஆவது வருடாந்த மாநாட்டின் பின்பு மக்கள் கட்சி மீது அலை வெள்ளம் போன்று ஒன்றிணைகின்றனர். தற்போது மக்கள் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே தற்போது எமக்கு பதவி மோகம் கிடையாது. மாறாக இவ்வரசை அடியோடு ஒழித்து கட்டி நீதியான மக்கள் ஆட்சியை உருவாக்குவதே எமது நோக்கம் என்றார்.
Post a Comment