தேர்தல்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், ஐ.தே.கட்சியும் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினர்கள் கடந்த 2014 செப்டம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.தே.கட்சியின் தலைவரும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையானர்.
குறிப்பாக ஊவா தேர்தல் தொடர்பிலும் அதன் பெறுபேறுகள் குறித்தும் கலந்துரையாடியதுடன் ஐ.தே.கட்சி முன்னைய தேர்தல்களைவிட அதிகளவு வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டிருப்பது குறித்தும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப பட்டது. கடந்த ஊவா தேர்தல் பிரசாரங்களின் போது பதுளை மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்களிப்பு பற்றியும் இக்கலந்துரையாடலின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த 2014 ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகளவு ஐ.தே.கட்சிக்கு தமது வாக்குகளை அளித்த போதிலும் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாமல் போனது குறித்தும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றினை ஐ.தே.கட்சி மூலமாக ஊவாவில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை ஐ.தே.கட்சி தலைமையிடம் NFGG வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.
பொருத்தமான வாய்ப்பு அமைகின்றபோது அது குறித்து நிச்சயம் மிகவும் சாதகமாக பரிசீலிக்கப்படும் என இதன்போது ஐ.தே.கட்சி தலைவர் உறுதியளித்தார்.
அத்துடன் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலிருந்து மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் ஊடாக ஊவா மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது குறித்து தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை விரைவில் நடத்தவும் இங்கு இணக்கம் காணப்பட்டது.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐ.தே.கட்சியும் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் எனவும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இவ்விடயம் குறித்து எதிர்வரும் காலங்களில் இரு தரப்பும் விரிவாக கலந்துரையாடுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், சட்டத்தரணி இம்தியாஸ் ஆகியோருடன் மேல் மாகாண உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் இதில் கலந்து கொண்டார்.
Post a Comment