விமான சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மரண தண்டனை
தாய்லாந்து நாட்டின் தற்காலிக பிரதமராக இருந்த யிங்லக் ஷினவாத்ராவின் குடும்ப அரசியலை எதிர்த்து, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2008ல் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தால், அந்நாட்டின் இரு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. கடந்த 2011ல் நடந்த தேர்தலில், யிங்லிக் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, எதிர்க்கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர்.
இறுதியில், கடந்த மே மாதம், யிங்லக், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் இடையில் நடந்த கலவரத்தை ஒடுக்கிய, அந்நாட்டு ராணுவம், இறுதியில் ஆட்சியை கைப்பற்றியது.முந்தைய ஆட்சிக் காலத்தில், விமான நிலையங்கள் மீது நடந்த தாக்குதலால், பலத்த சேதம் ஏற்பட்டதுடன், விமான நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதை மனதில் கொண்ட ராணுவ அரசு, மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க, புதிய சட்டத்தை வகுத்துள்ளது.அந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது: விமான சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, மிரட்டல் விடுப்பது, விமான நிலையத்தை மூடச் செய்வது அல்லது பாதிப்பை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.மேலும், விமான நிலையம் மீதான தாக்குதலில் உயிரிழப்பு ஏற்படுத்துபவர்களுக்கும், விமான நிலையத்திற்குள் கொலை செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும்.
Post a Comment