அரசமைக்கும் சவாலை வெற்றிக்கொள்வேன் - ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களை ஒரே மேடைக்கு கொண்டுவர முடியுமாவென அரசாங்கத் தரப்பினர் விடுத்த சவாலை வெற்றிகொண்டது போல் அரசமைக்கும் சவாலையும் வெற்றிகொள்வேனென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.
பதுளை வியலுவ தேர்தல் தொகுதியில்அவர் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டார். ஐ.தே.க.வே இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்தது. இவ்வாறான நிலையில் தற்போது அரசாங்கத்துடன் செயற்பட்டுவரும் செந்தில் தொண்டமான் தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ, சிறுவர்களின், மாணவர்களின் கல்வியை, சுகாதாரத்தை உயர்த்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தோட்டத்துறையில் வீட்டுத் திட்டங்களை அமைக்க ஐ.தே.க.முன்னின்று செயற்பட்டது.
இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் வீட்டுதிட்டப் பிரச்சினையில் பாராமுகமாகவுள்ளது. அரசாங்கத்துடன் ஒன்றிணைந்துள்ள செந்தில் தொண்டமான் பாராமுகமாகவுள்ளார். இதற்கு மேலும் இவர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு உதவுவார்கள் என நம்புவதற்கு இடமில்லை. சீன அரசாங்கத்திடம் கடன்பெற்று கம்பஹாவின் உள்வீதிகள் புனரமைப்பதற்கும் அம்பாந்தோட்டையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரம் கோடி ரூபா கடனில் தேர்தல் சமயத்திலாவது ஊவாவில் அபிவிருத்தி மேற்கொள்வதற்கு ஏதுவான செயற்பாடு இல்லை. யுத்தம் நிறைவடைந்து 5 வருடம் கடந்துள்ள நிலையில் யுத்தத்தின் முடிவில் நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதுள்ளது.
ஊவாவுக்கு கடந்த 5 வருடமாகவிருந்த முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ கல்வியை ,சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கையெடுக்கவில்லை. இலங்கையில் காணப்படும் வறுமையான 10 பிரதேச செயலகப் பிரிவில் 2 செயலகப் பிரிவு ஊவாவில் உள்ளது. இதை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்ப உறுப்பினர் முதலமைச்சராக இருந்தும் இதனை இல்லாமல் செய்யவில்லை. குடும்ப உறுப்பினர்கள் 1 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான மணிக்கூடு கட்டுகின்றனர். ஊவாவில் மக்கள் இருவேளை சாப்பிடும் நிலையில் உள்ளனர். இதனை பார்க்கும் போது இலங்கையில் இரு உலகம் உள்ளது. ஒன்று செல்வந்த உலகம். மற்றது வறுமை உலகம். செல்வந்தம் ஜொலிக்கும் உலகமாக குடும்பம் மாறியுள்ளது. இவர்களால் ஊவாவை அபிவிருத்தி செய்யமுடியுமென நம்பமுடியாது. எனக்கு அரசாங்கம் ஒரே மேடையில் ஐ.தே.க.தலைவர்களை கொண்டுவரமுடியுமா என சவால்விடுத்தது. அதனை செய்து காட்டியுள்ளேன் .இதுபோல் அரசமைக்கும் சவாலையும் வெற்றிக்கொள்வேன்.
Post a Comment