'போட்டுத் தாக்கிய' மஹிந்த ராஜபக்ஸ
ஐ.நா பொதுச்சபைக்கான தனது உரையின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக சாடியுள்ளார். இடம்பெற்ற உரையில் ஐநா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசாரணைகள் அரசியல் ரீதீயிலான நோக்கங்களை கொண்டது அளவுக்கதிகமானது என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்க்கு பிந்திய இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உள்ள சிலரின் தீய நோக்கத்துடனா நிகழ்ச்சிநிரலிற்கு துரதிஸ்டவசமாக பலியாகியுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுச்சபை முன் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாடு எட்டியுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மனித உரிமை பேரவை கணக்கிலெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனது நாடு அளவுக்கதிகமான முறையில் இலக்குவைக்கப்படுகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையை விட உலக நாடுகள் கவனம் செலுத்தவேண்டிய அவசர விடயங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாடொன்றின் சமூக. கலாச்சார, பாரம்பரியங்களை கணக்கிலெடுக்காமல் இடம்பெறும் வெளிநாடுகளின் தலையீடுகள் அந்த நாட்டை பலவீனப்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகள் நியாயற்றது – ஜனாதிபதி
யுத்தத்தின் பின்னரான இலங்கையின் மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை துரதிஸ்டவசமாக தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டு குறுகிய காலத்தில் நாட்டில் நல்லிணக்கம், புனர்வாழ்வு, புனரமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் நாடு அடைந்து வரும் முன்னேற்றங்களை மிகவும் சொற்ப அளவிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அங்கீகரிக்கின்றது என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும், பக்கச்சார்பற்ற தன்மை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ள போதிலும் அதற்கான வரவேற்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அவசர நிலைமைகள் காணப்படும் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கை நிலைமைகள் மாறுபட்ட விதத்தில் அணுகப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமெனவும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முறைமைகள் மற்றும் பொறிமுறைமைகள் பக்கச்சார்பற்ற அரசியல் நோக்கங்களின்றியதாக அமைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிதி உதவிகளை வழங்கும் தரப்பினரின் பணயக் கைதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்கள் செயற்படுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் உலக நாடுகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய வகையிலான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக பேச்சுவார்த்தைகளின் மூலம் இணக்கப்பாட்டை எட்ட முயற்சிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியான சவால்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிரகா தன்னிச்சையான பொருளாதார தீர்மானங்களை இலங்கை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடுகள் தொடர்பிலான விவகாரங்களின் போது ஐக்கியநாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் கடுமையான கொள்கைகளை பின்பற்றுவதனை தவிர்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கியூபா மீது ஏதேச்சாதிகார போக்கில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமை நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் காரணமாக ஏற்படக் கூடிய பாதக விளைவுகளை இலங்கை நன்கு உணர்ந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல விதமான குற்றச் செயல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சகல மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிரிகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகம் காத்திரமான வகையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment