மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர்களா முஸ்லிம்கள்...? ஆசாத் சாலி கேள்வி
(JM.Hafeez)
பொதுபலசேனாவின் தேசிய மகா நாட்டில் முன் வைக்கப்பட்ட எந்தப் பிரேரணையும், அந்த மகாநாட்டில் கலந்து கொண்ட பிக்கு அங்கத்தவர்களால் தீர்மானமாக நிறைவேற்றப்படாத ஒரு நிலையை ஊடகங்களில் வெளியான வீடியோ நாடாக்கள் மூலம் அவதானிக்க முடிந்ததாக மத்திய மாகாண சபை அங்கத்தவர் அசாத் சாலி தெரிவித்தார்.
(30.9.2014) அமெரிக்கத் தூதுவர் சிசன் மிச்சேல் அவர்கள் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் வைத்து மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஆசாத் சாலியைச் சந்தித்தார். அங்கு அவர்களுக்கிடையே இடம் பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஆசாத் சாலி அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தீபேத் ஆண்மீகத் தலைவர் ஒரு பயங்கரவாதி அல்ல. இருப்பினும் ஒரு சந்தர்ப்பத்தில் அவரை இலங்கைக்கு அழைத்துவர ஜாதிக ஹெலஉறுமய கட்சி முயற்சித்தது. அப்போது இலங்கையினுள் அவரை அனுமதிக்க முடியாது என்று அரசு கூறி விசா வழங்க மறுத்தது. ஆனால் பயங்கரவாத மதகுரு எனப் பெயர் பெற்ற '969' என்ற கொலைகார அமைப்பின் தலைவர் அச்சின் விராது உலக பயங்கரவாதப்பட்டியலில் உள்ளவர். அவரை நாட்டினுள் வர அனுமதித்தது மூலம் இலங்கை பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் ஒரு நாடு என்று உலக நாடுகள் நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது.
அது மட்டுமல்ல அச்சின் விராது விடுத்த அறிக்கையில் இரண்டு விடயங்கள் முக்கியமானது. ஒன்று '969' என்ற தனது அமைப்பும் பொதுபலசேனாவும் இணைந்து எதிர்காலத்தில் செயற்படத்;தயார் என்றார். மற்றது விராது இலங்கையினுள் வர விசா வழங்கியதற்கு நன்றி தெரிவித்திருந்தார். இவை இரண்டும் சிந்திக்க வேண்டியவை.
அதே நேரம் எமது நாட்டின் தலைவர் ஐ.நா. சபைக் கூட்டத்தில் அண்மையில் பங்கு கொண்ட போது இலங்கை முஸ்லீம்கள் எனது சகோதரர்கள்; என்று தெரிவித்துள்ளார். அதே நேரம் உள்நாட்டில் தம்புள்ளை முதல் அலுத்கம, பேறுவலைவரை அனைத்து பிரச்சினைகளின் போதும் எம்மீது தொடுக்கப்பட்ட அநியாயங்கள் அனைத்தையும் நியாயப் படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. பொது பலசேனாவின் விசமப் பிரசாரத்திற்கு தீணி போடப் படுகிறது. அதனைத் தடுக்க உள்நாட்டில் யாரும் இல்லை. அப்படியாயின் எப்படி எம்மைப் பார்த்து சகோதரர்கள் என்று கூறுவது.
இன்று சர்வதேச அரங்கில் அதிகளவு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. சிங்களவர்கள் உற்பட இலட்சக்கணக்கான இலங்கையர்கள் அரபு நாடுகளில் தொழில் புரிகின்றனர். அரபு நாடுகளைப் பகைத்துக் கொண்டால் அவர்களது பொருளாதார உதவியும் கிடைக்காது. அங்கு தொழில் புரிபவர்களது தொழில்களையும் இழக்க நேரிடும். அப்படியான ஒரு நிலையில் உலக முஸ்லிம் நாடுகளைப் பகைத்துக் கொள்ள யாராவது இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்குவார்களாயின் அது மடமையான ஒரு முடிவாகத்தான் இருக்கும்.
இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் போது முதலாவது குரல் கொடுத்த அமைப்பு ஐக்கிய அமேரிக்கத் தூதுவராலயமாகும். அது தம்புல்லை முதல் கலுத்துறை வரை நடந்துள்ளது. எனவே அமெரிக்கத் தூதுவர் மிச்செல் சீசன் அவர்களை நாம் மறக்க முடியாது. அவர் விரைவில் இலங்கையை விட்டும் விடை பெற உள்ளார். அவருக்கு முஸ்லீம்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
Post a Comment