Header Ads



ஐ.தே.க. க்கு வாக்களித்த முஸ்லிம்களை அரச தரப்பினர் அச்சுறுத்துகின்றனர் - ஹரீன் பெர்ணான்டோ

பாராளுமன்றத்திற்கு வரும் எண்ணம் இல்லை ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துக் கொண்டு எமது மக்களுக்கான தேவைகளை முன்னெடுப்பேன். இனிதான் ஆளும் தரப்புக்கு தலையிடி ஆரம்பிக்கப் போகின்றது என்று ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் ஐ.தே. கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்களை அரச தரப்பினர் அச்சுறுத்துவதோடு எமது ஆதரவாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பிட்டகோட்டேயில்  இடம்பெற்ற ஐ.தே. கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஊவா மாகாண சபை உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

என் மீது நம்பிக்கை வைத்து 173,000 க்கு மேல் வாக்குகளை வழங்கிய ஊவா மக்களை நடுத்தெருவில் விடமாட்டேன்.மாகாண சபையூடாக இது வரை காலமும் மக்களை சென்றடையாத சலுகைகள், உதவிகள் ஊக்குவிப்புக்களை பெற்றுக் கொடுக்க எதிர்கட்சித் தலைவராக இருந்து கொண்டு முன்னெடுப்பேன்.

அதேவேளை, ஊவா மாகாணசபை ஆட்சியாளர்கள் மக்களுக்கு நன்மையான திட்டங்களை கொண்டு வந்தால் ஆதரிப்பேன். இல்லாவிட்டால் எதிர்ப்பேன். விமர்சிப்பேன். இனிமேல்தான் சசீந்திரவுக்கு தலையிடி ஆரம்பிக்கப் போகின்றது. மக்களுக்கான எமது உறுப்பினர்களுடன் இணைந்து போராட்டங்கள் தொடரும். எனது வெற்றியுடனும் ஐ.தே.க. வின் எழுச்சியினாலும் எதிர்காலத்தில் அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளை வழங்க ஆரம்பிப்பது நிச்சயமாகும்.
  
பதுளை மாவட்டத்தில் ஐ.தே. கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பதற்காக அரச தரப்பு முக்கியஸ்தர்கள் முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு என்று சென்று அவர்களை அச்சுறுத்துகின்றார்கள். பலர் தாக்கப்பட்டுமுள்ளனர். எமது ஆதரவாளர்கள் 12 பேர் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 6 பேர் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேர்தல் முடிந்து 6 நாட்களுக்கு ஊர்வலங்களுக்கு தடை விதித்தார் தேர்தல்கள் ஆணையாளர். ஆனால், ஆளும் தரப்பில் வெற்றி பெற்ற ஆதரவாளர்கள் ஊர்வலங்களை நடத்தி எமது ஆதரவாளர்களை அச்சுறுத்தினார்கள். ஆனால், இதனை தடுக்காது தேர்தல்கள் ஆணையாளர் தூங்கிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பொலிஸாரும் அசமந்தப் போக்கிலேயே இருந்தனர். தற்போது நாம் தலையிட்டதால் நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது.
    
கட்சியில் தேசிய மட்டத்தில் பல பதவிகளை வழங்குவதற்கு என்னோடு ஆலோசிக்கப்பட்டது. தற்போதைக்கு பதவிகள் அவசியமில்லை. காலம் உள்ளது. அதன்போது கலந்துரையாடல்களை நடத்தி முடிவெடுப்பேன் என்றார்.

No comments

Powered by Blogger.