பிரித்தானியாவுடன் நீண்ட நாளைக்கு பின்னர் உறவுகொண்டது ஈரான்
கடந்த 1979ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளுடனான அந்நாட்டின் உறவு சிதைந்த நிலையிலேயே இருந்துவந்தது. கடந்த தேர்தலில் ஈரானின் அதிபராக ஹசன் ருஹானி பதவி ஏற்றபின்னரே நிலைமை சீரடையத் தொடங்கியது.
அணுசக்தி பயன்பாடு தொடர்பான தனது கொள்கைகளை ஈரான் தளர்த்தத் தொடங்க உலக நாடுகள் ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடைகளையும் படிப்படியாக விலக்கி வருகின்றன. சிரியாவிலும், ஈராக்கிலும் ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்கப் போரிட்டுவரும் ஐஎஸ் தீவாதிகளை அடக்க மேற்கத்திய நாடுகள் பிற நாடுகளின் ஆதரவை கேட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அமெரிக்காவின் எந்த நடவடிக்கையையும் விமர்சனம் செய்யும் ஈரானும் ஐஎஸ் இயக்கத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கையை ஆதரித்து வருகின்றது. பிரிட்டனும், பிரான்சுமே ஈரானின் இந்த ஒத்துழைப்பினைப் பெற முயற்சித்துவந்த நாடுகளாகும்.
இந்த சூழ்நிலையில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஐ. நா பொதுச் சபை கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும், ஈரான் அதிபர் ஹசன் ருஹானியும் நேற்று நேரடியாக சந்தித்துக் கொண்டனர். 1979ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்த இரு நாடுகளின் தலைவர்கள் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் உள்ள பிரிட்டிஷ் மையத்தில் நடைபெற்றது. ஈராக்கில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பரந்த ஆதரவினைப் பெறுவதும், ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான ஒரு சர்வதேச நடவடிக்கையை மேற்கொள்ளுவதுமே தற்போதைய கூட்டத்தின் முக்கிய அம்சங்களாகும் என்று குறிப்பிட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இதில் தங்களது நாட்டின் பங்களிப்பு பற்றி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் ஆதரவினைப் பெறுவதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால் கடந்த ஆண்டு சிரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்த மக்களவை வாக்கெடுப்பில் கிடைத்த அவமானகரமான தோல்வி அவர்முன் ஒரு எச்சரிக்கையாகவே வெளிப்படுகின்றது என்பதுவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment